விலைவாசியை கட்டுப்படுத்து! மாதர் சங்கத்தினர் ஆர்பாட்டம்
விலைவாசியை கட்டுப்படுத்து! மாதர் சங்கத்தினர் ஆர்பாட்டம்
UPDATED : அக் 26, 2026 06:51 PM
ADDED : அக் 26, 2026 06:46 PM

கோவை: தமிழகத்தில் அரிசி, பருப்பு, சர்க்கரை, காய்கறி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்யாவசிய பொருளின் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி, கலெக்டர் அலுவலகம் முன் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறுகையில், '
அத்தியாவசிய பொருட்கள் விலை விண்ணை முட்டுகிறது. அனைத்து ரேஷன் கடைகளிலும் வெங்காயம் விற்பதில்லை. மானிய விலை அரிசியும் பல ரேஷன் கடைகளில் கிடைப்பதில்லை.
ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் விதிமுறைகளை மீறி அதிக எண்ணிக்கையில் ரேஷன்கார்டு தாரர்கள் இருப்பதால், அரசு வழங்கும் மானிய விலை அத்தியாவசிய பொருட்களை பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது. உயர்ந்து வரும் விலைவாசியை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்,'என தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, காய்கறிகள் மற்றும் சமையல் பொருட்களின் விலை உயர்வை கண்டிக்கும் வகையில்,பருப்பை செயின் போல் அணிந்து; களிமண்ணால் செய்த காய்கறி, சமையல் பொருட்களை கைகளில் ஏந்தி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
