/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழையால் கேரட், பீன்ஸ் விலை உயர்வு
/
மழையால் கேரட், பீன்ஸ் விலை உயர்வு
ADDED : அக் 22, 2025 11:39 PM

மேட்டுப்பாளையம்: நீலகிரி மாவட்டத்தில் தொடரும் மழையால் மேட்டுப்பாளையம் மொத்த மார்க்கெட்டிற்கு கேரட், பீன்ஸ் வரத்து குறைந்தது. இதனால் 10 முதல் 20 சதவீதம் வரை விலை உயர்ந்தது.
மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் மொத்த காய்கறி மார்க்கெட் உள்ளது. அதே போல் நெல்லித்துறை சாலையில் நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கம் உள்ளன.இந்த காய்கறி மார்க்கெட்டிற்கு நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரட், மூட்டை கோஸ், பீன்ஸ், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகள் வருகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அங்கு விளையும் காய்கறிகளை அறுவடை செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மார்க்கெட்டிற்கு காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் மொத்த காய்கறி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடை உரிமையாளர் ராஜா கூறியதாவது:-
மழையினால் காய்கறிகள் வரத்து 30 சதவீதம் குறைந்துள்ளது. மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் நேற்றைய தினம் கேரட் ஒரு கிலோ ரூ.35 முதல் ரூ.50 வரையும், பீன்ஸ் ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.55 வரையும்,பீட்ரூட் ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரையும் விலை அதிகரித்து விற்பனை ஆனது. மழை நீடிக்கும் பட்சத்தில் காய்கறிகள் வரத்து பாதிக்கப்பட்டு, விலை மேலும் உயரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்க அதிகாரி ஒருவர் கூறுகையில்,45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை ஊட்டி உருளைக்கிழங்கு அதிகபட்சமாக ரூ.2,250 வரை விற்பனை ஆனது. 1000, மூட்டைகள் மட்டுமே வரத்து இருந்தது.
கடந்த சில நாட்களாக வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் உருளைக்கிழங்கு விலை ரூ.2,000 த்தை எட்டாமல் இருந்து வந்தது. தற்போது அதிரடியாக உயர்ந்துள்ளது, என்றார்.-----