ADDED : செப் 23, 2026 04:21 PM
மேட்டுப்பாளையம்: அரவிந்த் நகர், ஐயப்பன் நகர் ஆகிய பகுதிகளில், சீராக குடிநீர் வழங்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரமடை ஊராட்சி ஒன்றியம், சிக்கதாசம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட, அரவிந்த நகர், ஐயப்பன் நகர், கருப்பராயன்குட்டை, படுகர் காலனி ஆகிய பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதிகளுக்கு, போதிய குடிநீர் விநியோகம் இல்லாததால், மக்கள் அவதிப்படுகின்றனர்.
இப்பகுதி மக்கள் கூறியதாவது:
மேட்டுப்பாளையம் நகர் மற்றும் சிக்கதாசம்பாளையம் ஊராட்சி வழியாக பவானி ஆறு பயணிக்கிறது. ஆற்றில் இருந்து சிக்கதாசம்பாளையம் ஊராட்சிக்கு என, தனியாக குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டு உள்ளது. தவிர, குத்தாரிபாளையம் குடிநீர் திட்டம், திருப்பூர் கூட்டு குடிநீர் திட்டம், கரட்டுமேடு குடிநீர் திட்டம் ஆகிய திட்டங்கள் வாயிலாக, குடிநீர் வழங்கப்படுகிறது.
ஓராண்டுக்கு முன்பு வரை, இப்பகுதிகளுக்கு மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்பட்டது. சில மாதங்களாக ஏழு நாட்களுக்கு ஒரு முறை விநியோகிக்கப்படுகிறது. பவானி ஆறு அருகே ஓடியும், மக்களுக்கு போதிய குடிநீர் கிடைப்பதில்லை. எனவே, சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
சிக்கதாசம்பாளையம் ஊராட்சி செயலர் மகாலட்சுமி கூறுகையில், ‘‘ஐயப்பன் நகர், அரவிந்த் நகர், கருப்பராயன்குட்டை, படுகர் காலனி ஆகிய பகுதிகளுக்கு சுழற்சி முறையில், 7 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. இப்பகுதிகளுக்கு மூன்று நாட்களுக்கு ஒரு முறை, சீரான குடிநீர் விநியோகிக்கும்படி, நீர் திறந்து விடும் நபரிடம் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், புகார் குறித்து, நேரடியாக விசாரித்து, சீராக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும்,’’ என்றார்.
