/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சொத்து வரி: புதிய கட்டடங்களில் கமிஷனர் ஆய்வு
/
சொத்து வரி: புதிய கட்டடங்களில் கமிஷனர் ஆய்வு
ADDED : ஜன 20, 2025 11:15 PM
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் 20 ஆயிரம் குடும்பங்கள் என சுமார் 80 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா உத்தரவின் படி, நகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரியினங்களை அதிகாரிகள் தீவிரமாக வசூல் செய்து வருகின்றனர்.
இதனிடையே புதிதாக கட்டப்படும் கட்டடங்கள், அதன் பணிகள் நிறைவடைந்த பின், அதற்கு புதிதாக சொத்து வரி விதிப்பது தொடர்பாக கமிஷனர் மற்றும் அதிகாரிகள் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களுக்கு, நேரில் சென்று ஆவணங்களின் அடிப்படையில், கட்டடம் அதே அளவுக்கு சரியாக கட்டப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். புதிய கட்டடங்களுக்கு உடனே சொத்து வரி புத்தகம் வழங்க கமிஷனர் அமுதா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி வருகிறார்.
இதுகுறித்து, நகராட்சி கமிஷனர் அமுதா கூறுகையில், சொத்து வரி உள்ளிட்ட வரியினங்களை மக்கள் தவறாமல் செலுத்த வேண்டும். செலுத்தாமல் பல மாதங்களாக பாக்கி வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.