/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகராட்சி எல்லை விரிவாக்கத்துக்கு உத்தேச பட்டியல்! ஏழு ஊராட்சிகள் இணைப்பு குறித்து தகவல்
/
நகராட்சி எல்லை விரிவாக்கத்துக்கு உத்தேச பட்டியல்! ஏழு ஊராட்சிகள் இணைப்பு குறித்து தகவல்
நகராட்சி எல்லை விரிவாக்கத்துக்கு உத்தேச பட்டியல்! ஏழு ஊராட்சிகள் இணைப்பு குறித்து தகவல்
நகராட்சி எல்லை விரிவாக்கத்துக்கு உத்தேச பட்டியல்! ஏழு ஊராட்சிகள் இணைப்பு குறித்து தகவல்
ADDED : செப் 30, 2024 11:06 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சியுடன், எந்தெந்த ஊராட்சிகளை இணைத்து விரிவாக்கம் செய்யலாம் என்ற உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நகராட்சி, 13.87 சதுர கி.மீ., பரப்பு கொண்டது. இரண்டாம் நிலை நகராட்சியாக கடந்த, 1920ல் தரம் உயர்த்தப்பட்டது. அதன்பின், 1953ல் முதல் நிலை நகராட்சியாகவும், 1973ல் தேர்வு நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது; 1983 ஏப்.,1ம் தேதி தேர்வு நிலையில் இருந்து சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
கடந்த, 1921ல் மக்கள் தொகை 11,875 பேர் இருந்தனர். படிப்படியாக மக்கள் தொகை உயர்ந்து, 2001ம் ஆண்டு, 88,303 பேர் இருந்தனர். அதன்பின், 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 90,124 பேர் உள்ளனர். அதில், ஆண்கள், 44,811; பெண்கள், 45,302; மூன்றாம் பாலினத்தவர்கள், 11 பேரும் உள்ளனர்.
நகரின் வளர்ச்சி மற்றும் வருமானத்தை பெருக்கும் வகையில் அருகேயுள்ள கிராமங்களையும், மற்றும் பேரூராட்சிகளையும் இணைத்து எல்லை விரிவாக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
முன்பே திட்டம்
கடந்த, 2017ம் ஆண்டு எல்லை விரிவாக்கம் குறித்த அரசின் அறிவுறுத்தலின் படி, ஆச்சிப்பட்டி, கிட்ட சூராம்பாளையம் (பனிக்கம்பட்டி), புளியம்பட்டி, ஊஞ்சவேலாம்பட்டி, சின்னாம்பாளையம், மாக்கினாம்பட்டி, ஜமீன் முத்துார், தாளக்கரை உள்ளிட்ட ஊராட்சிகளையும்; சூளேஸ்வரன்பட்டி மற்றும் ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சிகளை நகராட்சியுடன் இணைத்து எல்லை விரிவாக்கம் செய்யலாம் என அரசுக்கு வரைபடத்துடன் கருத்துரு அனுப்பப்பட்டது.
ஊராட்சிகள் இணைப்பு
கடந்த முறை அனுப்பப்பட்ட கருத்துரு நிறைவேற்றப்படாமல் உள்ளது. இந்நிலையில், ஆறு ஆண்டுகளுக்கு பின், நகராட்சி நிர்வாக இயக்குனர் அறிவுறுத்தலின்படி, நகராட்சி கமிஷனர், தெற்கு மற்றும் வடக்கு ஒன்றிய ஆணையாளர்களுக்கு கடந்தாண்டு டிச., மாதம் கடிதம் அனுப்பினார்.
அதில், நகராட்சிக்கு அருகே உள்ள ஏழு ஊராட்சிகள், நகராட்சியுடன் இணைப்பது குறித்து செயற்குறிப்பினை அனுப்பி வைக்க வேண்டும். எனவே, தங்களது எல்லைக்கு உட்பட்ட தெற்கு, வடக்கு கிராம ஊராட்சிகளின் மொத்த பரப்பளவு, மக்கள் தொகை, மூன்றாண்டுகளில் தணிக்கை செய்யப்பட்ட வரவு, செலவு அறிக்கை, ஊராட்சி வரைபடம் மற்றும் ஊராட்சி தீர்மானம் ஆகியவற்றை அனுப்பி வைக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது, என தெரிவிக்கப்பட்டது.
37.12 சதுர கி.மீ., பரப்பு
இந்நிலையில், நகராட்சியுடன் இணைக்கப்படும் ஊராட்சிகள் குறித்த உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அதில், ஜமீன் முத்துார் - 3,761; புளியம்பட்டி - 3,280, சின்னாம்பாளையம் - 8,695, மாக்கினாம்பட்டி - 8,134, ஊஞ்சவேலாம்பட்டி - 4,253, கிட்டசூராம்பாளையம் - 1,889, ஆச்சிப்பட்டி - 11,551 என மொத்தம், 41,563 பேர் உள்ளனர்.
அதில், நகராட்சியில் உள்ள, 90,124 மற்றும், ஊராட்சிகளில் வசிக்கும் 41,563 பேரை சேர்த்து மொத்தம், 1,31,687 பேராக மக்கள் தொகை அதிகரிக்கும். நகராட்சி பரப்பு மற்றும் ஊராட்சிகளின் பரப்பு, 23.25 சதுர கி.மீ., சேர்த்து, மொத்தம், 37.12 சதுர கி.மீ., பரப்பளவாக மாறும்.
அதிகாரிகள் கூறுகையில், 'நகராட்சி எல்லை விரிவாக்கத்துக்காக இணைக்கப்படும் ஏழு ஊராட்சிகள் குறித்த உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது அரசு பரிசீலனையில் உள்ளது. அரசின் உத்தரவு வந்ததும், இணைப்புக்கான பணிகள் துவங்கப்படும்,' என்றனர்.