பி.ஏ.பி., குழாய் பாசன அறிவிப்பை திரும்ப பெறாவிட்டால் போராட்டம்!
பி.ஏ.பி., குழாய் பாசன அறிவிப்பை திரும்ப பெறாவிட்டால் போராட்டம்!
ADDED : ஜூலை 09, 2026 06:03 AM
பொள்ளாச்சி: 'பி.ஏ.பி., திட்டத்தில் குழாய் பாசனம் நடைமுறைக்கு ஒத்துவராது,' என, தி.மு.க., எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவை தெற்கு மாவட்ட செயலாளர் முருகேசன் அறிக்கை வருமாறு:
பி.ஏ.பி., திட்டத்தில், கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, சுமார், 4.25 லட்சம் ஏக்கர் பாசனம் பெறுகிறது.
தி.மு.க., ஆட்சியில், 4,500 கோடி மதிப்பீட்டில், கால்வாய் மேம்பாடு திட்ட வடிவம் முன்னெடுக்கப்பட்டது.
ஆட்சி மாற்றத்துக்கு பின், சமீபத்தில், திருப்பூர் வந்த அமைச்சர் அருண்ராஜ், அந்த திட்ட அறிக்கை செயல்படுத்தப்படாது, குழாய் வழி பாசனம் செயல்படுத்தப்படும் என அறிவித்தது, விவசாயிகளிடையே மனஉளைச்சலை ஏற்படுத்தியது.
பி.ஏ.பி., திட்டத்தால், நிலத்தடி நீரை செறிவூட்டி கால்வாயின் இருபுறங்களிலும் உள்ள விவசாய நிலங்கள், கிணறுகள் பாதுகாக்கப்படுகின்றனர். குழாய் பாசனம் நடைமுறைக்கு வந்தால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும்.
பிரதான கால்வாயில், 10 - 20 கி.மீ.,க்கு குழாய் பாசனம் சாத்தியம், ஆனால்,126 கி.மீ., நீளத்துக்கும் குழாய் வாயிலாக பாசனத்துக்கு வழங்குவது சாத்தியமில்லாதது.
குழாய் பாசன அறிவிப்பை திரும்ப பெறாவிட்டால், தி.மு.க., சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
