ADDED : ஜூன் 20, 2026 04:33 AM

பொள்ளாச்சி: மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில், பொள்ளாச்சி காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் கண்ணுசாமி தலைமை வகித்தார்.
அதில், அரசு நிர்ணயம் செய்த கல்வி கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூல் செய்யும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சி.பி.எஸ்.இ., மற்றும் பிளஸ் 2 தேர்வு தாள் திருத்தும் புதிய நடைமுறையை திரும்ப பெற வேண்டும். சி.பி.எஸ்.இ., மும்மொழி கொள்கையை திணிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஒருங்கிணைப்பாளர்கள் மகாலிங்கம், கோபால், மனோகரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
பள்ளிகளுக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் கல்வி யாளர் பிரின்ஸ் கஜேந்திர பாலாஜி, நிருபர்களிடம் கூறுகையில், ''அரசுப்பள்ளிகள் வாயிலாக தரமான கல்வியை மாணவர்களுக்கு உறுதி செய்ய முடியும். அரசுப்பள்ளிகளை வலுப்படுத்துவதற்காக பல்வேறு இயக்கங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. தனியார் பள்ளி கட்டணம், மத்திய அரசின் விக்சித் பாரத் சிக் ஷா அதிஷ்தான் கல்வி ஆணைய மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது,'' என்றார்.
