/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோரிக்கைகளை நிறைவேற்ற மறுத்தால் போராட்டம் வெடிக்கும்! அரசுக்கு 'ஜாக்டோ -- ஜியோ' எச்சரிக்கை
/
கோரிக்கைகளை நிறைவேற்ற மறுத்தால் போராட்டம் வெடிக்கும்! அரசுக்கு 'ஜாக்டோ -- ஜியோ' எச்சரிக்கை
கோரிக்கைகளை நிறைவேற்ற மறுத்தால் போராட்டம் வெடிக்கும்! அரசுக்கு 'ஜாக்டோ -- ஜியோ' எச்சரிக்கை
கோரிக்கைகளை நிறைவேற்ற மறுத்தால் போராட்டம் வெடிக்கும்! அரசுக்கு 'ஜாக்டோ -- ஜியோ' எச்சரிக்கை
ADDED : மார் 23, 2025 11:45 PM

கோவை: தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்காலம் நிறைவடைவதற்குள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று, ஜாக்டோ -- ஜியோ சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை சிவானந்தா காலனியில், ஜாக்டோ - ஜியோ இணைப்பு சங்கங்களில், அங்கம் வகிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள் உள்ளிட்ட 72 சங்கத்தினர், நேற்று உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், போராட்டம் இன்னும் தீவிரமடையும்; பள்ளிகள் திறந்தவுடன் முழு அளவில் போராட்டம் நடக்கும் என, எச்சரிக்கின்றனர் அதன் நிர்வாகிகள்.
பள்ளிகள் திறந்தவுடன் முழு வீச்சில் 'ஸ்டிரைக்'
'ஜாக்டோ - ஜியோ' கோவை மாவட்ட நிதி காப்பாளர் அருளானந்தம் கூறியதாவது:
தமிழக அரசுக்கு எதிராக இன்று(நேற்று) நடந்த, உண்ணாவிரத போராட்டத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், முழு எழுச்சியுடன் பங்கேற்றுள்ளனர். சட்டசபையில் எங்களது கோரிக்கைகள் குறித்த அறிவிப்பு வெளியானால், வீரியம் குறையும். இல்லையேல், ஜூன், ஜூலை மாதங்களில் எங்களது போராட்டம் தீவிரமாக இருக்கும்.
இன்னும், 10 நாட்களில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஒன்றுகூடி ஆலோசித்து, அடுத்தகட்ட போராட்ட நடவடிக்கை எடுக்க உள்ளனர். ஆசிரியர்களை பொறுத்தவரையில், பள்ளிகள் திறந்த பிறகு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதையே, ஒட்டுமொத்த கருத்தாக முன்வைக்கின்றனர்.
எங்களது, 10 அம்ச கோரிக்கைகளில் பழைய ஓய்வூதிய திட்டம் என்பது முக்கியமானது. பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வர, தி.மு.க., அரசு ஒரு குழு அமைத்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சியிலும் குழு அமைக்கப்பட்டது. அதோடு சரி.
எம்.எல்.ஏ.,-எம்.பி.,கள் எல்லோரும், பழைய ஓய்வூதியம் திட்டத்தில் ஓய்வூதியம் வாங்கும்போது, பி, சி, டி கிரேடு ஊழியர்களுக்கு மட்டும், புதிய பென்ஷன் என்பது சர்வாதிகார போக்கு.
நாங்கள் குடும்பத்துடன் ஓட்டு போடவில்லையேல், இந்த ஆட்சி அமைந்திருக்காது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தபோது, 29 தொகுதிகளில், 5,000 ஓட்டுகளிலும், 14 தொகுதிகளில், 10 ஆயிரத்துக்கும் குறைவான ஓட்டுகள் என, 43 தொகுதிகளிலும் சேர்த்து, 1.14 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றனர்.
இன்று ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தவறாமல் போராட்டத்தில் பங்கேற்றது, கூடுதல் உத்வேகத்தை தந்துள்ளது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் போராட்டம் தீவிரமாக இருந்தது.
வரும் தேர்தலில் தி.மு.க.,வுக்கும் எங்களது ஓட்டுக்கள் விழாது; அ.தி.மு.க.,வுக்கும் விழாது. வரும் தேர்தலில் எங்கள் பார்வை புதிதாக இருக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
'அரசு ஊழியர்களால்தான் ஆட்சி'
தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிப்பொறுப்பேற்று நான்காண்டுகள் நிறைவடைந்து விட்டன. அரசு ஊழியர்களுக்கு கொடுத்த, எந்த ஒரு வாக்குறுதியையும் இனியும் நிறைவேற்றவில்லை. அரசு ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தாரின் ஒட்டுமொத்த ஆதரவால் தான் தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால் அதை மறந்து, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறி விட்டது.
- பரமேஸ்வரி, மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் ஜாக்டோ - ஜியோ
'இனி போராட்டம் வலுக்கும்'
நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற, தாமதம் செய்கிறது அரசு. கோரிக்கைகளை நிறைவேற்ற பல கட்ட போராட்டங்களை நடத்தி விட்டோம்; எந்த பலனும் இல்லை. இந்த உண்ணாவிரதப்போராட்டம், அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிறைவேறாத பட்சத்தில், அடுத்தகட்டமாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துச்செல்லும். இனி மிகவும் வலிமையான போராட்டமாக இருக்கும்.
- சாந்தி, இணை செயலாளர்
ஜாக்டோ - ஜியோ
'துச்சமாக நினைக்காதீர்'
அரசுப்பணியாளர்களை தமிழக அரசு துச்சமாக நினைக்கிறது. அதனால் தான் இவ்வளவு போராட்டங்களுக்குப்பிறகும், அரசு ஊழியர்கள் மீது கரிசனம் காட்டாமல் பிடிவாதமாக இருந்து வருகிறது. அரசு ஊழியர்களின் நலன் கருதி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் காலவரையற்ற போராட்டத்தில் இறங்குவதற்கு, தயாராகி வருகிறோம்.
- சாந்தி, மாநில துணைத்தலைவர்
தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கம்
'பணி நிரந்தரம் செய்யணும்'
சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நுாலகர்கள், கல்வித்துறையில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள், தொகுப்பு ஊதியத்தில் பணிபுரியும் சுகாதார செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
- வேல்ராஜ், மாவட்ட செயலாளர்
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்