/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷனில் தேங்காய் எண்ணெய் வழங்குங்க! ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
/
ரேஷனில் தேங்காய் எண்ணெய் வழங்குங்க! ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
ரேஷனில் தேங்காய் எண்ணெய் வழங்குங்க! ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
ரேஷனில் தேங்காய் எண்ணெய் வழங்குங்க! ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
ADDED : நவ 13, 2024 07:10 AM

பொள்ளாச்சி : 'ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும்,' என பொள்ளாச்சி அருகே நடந்த ஆர்பாட்டத்தில் எம்.எல்.ஏ., வலியுறுத்தினார்.
ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக, தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டுமென, கட்சி சார்பற்ற விவசாய சங்கங்களின் சார்பாக, தொடர்ந்து, 100 நாட்களுக்கு, 100 கடைகளை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதில், நேற்று, பொள்ளாச்சி அடுத்துள்ள ராமநாதபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:
விவசாயிகள், லாபம், நஷ்டம் பார்க்காமல் பொருட்களை விளைவித்து விற்பனை செய்கின்றனர். அவர்களது கஷ்டம் மட்டும் ஓயவில்லை. கொரோனா காலத்திலும் காய்கறிகளை விளைவித்து விற்பனை செய்தனர். விளைவிக்கும் பொருட்களை இருப்பு வைக்க முடியாது என்பதால், கிடைக்கும் விலைக்கு விற்று வருகின்றனர்.
கடந்த, 2011 - 21ம் ஆண்டு வரை தேங்காய், கொப்பரைக்கு நல்ல விலை கிடைத்தது. தற்போது அது தலைகீழாக மாறியுள்ளது.மத்திய அமைச்சர்களை சந்தித்து, தேங்காய் எண்ணெய் ரேஷன் கடைகளில் வழங்க வலியுறுத்தப்பட்டது. எனினும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
வடமாநிலங்களை போன்று விவசாயிகள் ஒன்று திரண்டு போராடினால் மட்டுமே, இனி தீர்வு கிடைக்கும். பாமாயிலுக்கு பதிலாக ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும். இதற்காக விவசாயிகளோடு இணைந்து பாடுபடுவேன். சட்டசபையில், வலியுறுத்தி பேசியுள்ளேன்.
கேரளா வாடல் நோய், வெள்ளை ஈ என பல வித நோய்கள் வந்தாலும், அதற்கான மருந்துகள் கண்டுபிடிக்க முடியவில்லை. விவசாயிகளின் நிலை பரிதாபமாக உள்ளது. ஆனைமலையாறு - நல்லாறு திட்டமும் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
விவசாய சங்க பிரதிநிதிகள் சண்முகம், சக்திவேல், பத்மநாபன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க நிர்வாகிகளிடம் மனு கொடுக்கப்பட்டது.