/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நெல்லித்துறை பாலத்தில் குடிநீர் குழாய் அமைக்க தற்காலிக அனுமதி; பேச்சுவார்த்தையில் பொதுமக்கள் சம்மதம்
/
நெல்லித்துறை பாலத்தில் குடிநீர் குழாய் அமைக்க தற்காலிக அனுமதி; பேச்சுவார்த்தையில் பொதுமக்கள் சம்மதம்
நெல்லித்துறை பாலத்தில் குடிநீர் குழாய் அமைக்க தற்காலிக அனுமதி; பேச்சுவார்த்தையில் பொதுமக்கள் சம்மதம்
நெல்லித்துறை பாலத்தில் குடிநீர் குழாய் அமைக்க தற்காலிக அனுமதி; பேச்சுவார்த்தையில் பொதுமக்கள் சம்மதம்
ADDED : செப் 15, 2025 10:32 PM

மேட்டுப்பாளையம்; நெல்லித்துறை பாலத்தில் குடிநீர் குழாய் கொண்டு செல்ல நடந்த பேச்சுவார்த்தையில் பொதுமக்கள் சம்மதம் தெரிவித்தனர்.
மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு நெல்லித்துறை ஊராட்சிக்கு உட்பட்ட விளாமரத்தூரில் இருந்து, குடிநீர் எடுக்க திட்டமிடப்பட்டது. இதற்காக தமிழக அரசு, 22.80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. இதற்கான குழாய்களை நெல்லித்துறை பாலத்தில் அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதனால் பாலத்துக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று கூறி நெல்லித்துறை மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்தனர். பாலத்தின் பக்கவாட்டில் இரும்பு ஆங்கில் அமைத்து, அதில் குழாய் அமைக்கவும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பவானி ஆற்று பாலத்தின் மீது குழாய்கள் அமைக்க முடியாமல் பணிகள் நின்றன. இந்நிலையில் சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க, மாவட்ட கலெக்டர் பவன் குமார் உத்தரவின் பேரில், நேற்று மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகத்தில், நெல்லித்துறை மக்களுக்கு விளக்கம் அளிக்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மேட்டுப்பாளையம் தாசில்தார் ராமராஜ் தலைமை வகித்தார். மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா, பொறியாளர் சரவணகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். நெல்லித்துறை ஊராட்சி முன்னாள் தலைவர்கள் சதாசிவம், செல்வி மற்றும் ஊர் பொதுமக்களும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நகராட்சி அதிகாரிகள் பேசுகையில் குடிநீர் குழாய் கொண்டு செல்ல மூன்று கோடி ரூபாயில் புதிதாக உயர் மட்ட பாலம் தனியாக கட்டப்படும். அதுவரை, 350 மில்லி மீட்டர் சுற்றளவு கொண்ட அதிக அடர்த்தி கொண்ட பாலி எத்திலின் குழாயை, ஏற்கனவே உள்ள பாலத்தின் பக்கவாட்டில் ஆங்கிள் அமைத்து தற்காலிகமாக கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது 'என்றனர்.
தாசில்தார் ராமராஜ் பேசுகையில்,புதிய பாலத்தில் நகராட்சி குடிநீர் குழாயும், தேக்கம்பட்டி ஊராட்சி குடிநீர் குழாய்களும் கொண்டு செல்லும் வகையில்கட்டப்படும். இப்பாலம் 2026 டிசம்பர் மாதத்துக்குள் கட்டி முடிக்கப்படும், என்றார். இதற்கு நெல்லித்துறை மக்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து பாலத்தின் பக்கவாட்டில் குழாய் கொண்டு செல்வதற்கான பணிகள் துவங்கின.