/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சர்வர் பிரச்னையால் பத்திரங்கள் பதிவு செய்வதில் தொடரும் சிக்கல் அமாவாசை நாளிலும் பொதுமக்கள் அவதி
/
சர்வர் பிரச்னையால் பத்திரங்கள் பதிவு செய்வதில் தொடரும் சிக்கல் அமாவாசை நாளிலும் பொதுமக்கள் அவதி
சர்வர் பிரச்னையால் பத்திரங்கள் பதிவு செய்வதில் தொடரும் சிக்கல் அமாவாசை நாளிலும் பொதுமக்கள் அவதி
சர்வர் பிரச்னையால் பத்திரங்கள் பதிவு செய்வதில் தொடரும் சிக்கல் அமாவாசை நாளிலும் பொதுமக்கள் அவதி
ADDED : மே 26, 2025 11:10 PM
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் பத்திர பதிவு அலுவலகத்தில் சர்வர் பிரச்னையால், பத்திரங்கள் பதிவு செய்வதில், 3 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.
தமிழகத்தில் கோவை, சென்னை, வேலூர், மதுரை உள்ளிட்ட பத்திர பதிவு மண்டலங்களில், 575 பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படுகின்றன. பத்திர பதிவு பணிகள் 'ஆன்லைன்' ஆக்கப்பட்ட பிறகும், சர்வர் தாமதம் காரணமாக பத்திரம் பதிவு செய்வதில் தொடர்ந்து சிக்கல் ஏற்படுகிறது. பத்திர பதிவு பணிகளை வேகப்படுத்த, பல்வேறு தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, நடைமுறையில் உள்ளன. ஆனாலும், பத்திரம் பதிவு செய்வதில், தொழில்நுட்ப கோளாறுகள் தவிர்க்க முடியாமல் உள்ளன.
இது குறித்து பத்திரப்பதிவு துறையினர் கூறுகையில்,' ஒரே நேரத்தில் அதிக அளவு பத்திரங்கள் பதிவு செய்வதால், சர்வர் பாதிக்கிறது. வில்லங்க சான்று பெற, டோக்கன் பதிவு செய்ய, ஆவண நகல் பெற, ஆன்லைன் சர்வர்கள் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. இதனால் சர்வர் திறன் அதிகரிக்க வேண்டி உள்ளது. நவீன தொழில்நுட்பம் வாயிலாக, எந்த நேரத்திலும் சர்வர் முடங்காமல் இருக்க தேவையான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இது தவிர, புதிய தொழில்நுட்பத்தில் எந்த வகையிலும் பிழையில்லாமல் சரியான முறையில் பத்திரங்கள் பதிவு செய்யலாம். புதிய தொழில்நுட்பத்தில், ஒரே நேரத்தில் பத்திரங்களை பலரும் பதிவு செய்யலாம். இதனால் காலதாமதம், புரோக்கர் தலையீடு, போலி பத்திரங்கள் முறைகேடுகளை தவிர்க்க முடியும்' என்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்,' பெரியநாயக்கன்பாளையம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நேற்று அமாவாசை தினம் என்பதால், வழக்கத்தை விட அதிகமான பத்திரங்கள் பதிவு செய்வதற்காக டோக்கன்கள் போட்டு வைக்கப்பட்டிருந்தன. ஆனால், சர்வர் பழுது காரணமாக பத்திரப்பதிவு நேற்று காலை, 10:00 மணி முதல், 1:00 மணி வரை முடங்கியது. மதியம், 1:00 மணிக்கு பிறகே பத்திரப்பதிவு துவங்கியது. பெரியநாயக்கன்பாளையம் பத்திர பதிவு அலுவலகத்தில் நாளொன்றுக்கு சராசரியாக, 150 பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதுவரை அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என பழுதான சர்வர் நேற்று தொடர்ந்து மூன்று மணி நேரம் பழுதானதால், பத்திரப்பதிவுக்காக முதியோர் உள்ளிட்ட பலர் காத்திருந்தனர்.
பத்திரப்பதிவில் சர்வர் பழுதாகாமல் இருக்க புதிய தொழில்நுட்பத்தை உடனடியாக அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.