/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மக்கள் தொடர்பு முகாம்; ரூ.8.87 கோடி நலத்திட்ட உதவி
/
மக்கள் தொடர்பு முகாம்; ரூ.8.87 கோடி நலத்திட்ட உதவி
மக்கள் தொடர்பு முகாம்; ரூ.8.87 கோடி நலத்திட்ட உதவி
மக்கள் தொடர்பு முகாம்; ரூ.8.87 கோடி நலத்திட்ட உதவி
ADDED : பிப் 13, 2025 09:51 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில், 793 பயனாளிகளுக்கு, 8.87 கோடி ரூபாய் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஊத்துக்குளியில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. சப் - கலெக்டர் கேத்ரின் சரண்யா, உதவிகலெக்டர்(பயிற்சி) அங்கித்குமார் ஜெயின், ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி தலைவர் அகத்துார்சாமி, துணை தலைவர் சையது அபுதாஹூர்,சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் (பொ) சங்கீதா, தாசில்தார் மேரிவினிதா மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தலைமை வகித்து பேசியதாவது:
மக்கள் தொடர்பு முகாம் ஒவ்வொரு தாலுகாவிலும் உள்ள கிராமத்தை தேர்வு செய்து, ஊரில் என்னென்ன தேவைகள் என்பது குறித்து, மனுக்களாக பெற்று அதன் அடிப்படையில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கப்படும் மனுக்கள், மக்கள் தொடர்பு முகாம்களில் வழங்கப்படும் கோரிக்கை மனுக்கள் என அனைத்து மனுக்களுக்குமே, முதல்வரின் முகவரி என்கிற இணையதளத்தில் பதிவு செய்யப்படுகின்றன.
ஒவ்வொரு மனுக்களும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு, அதன் நிலை குறித்து கேட்டறியப்படுகின்றது. மனுதாரருக்கும், மனுவின் நிலை குறித்து தகவல் தெரிவிக்கப்படுகிறது.
பொள்ளாச்சி பகுதியில் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு காப்பீடு அட்டைகளும், வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்புகளும், உயர் கல்வி பயில கடனுதவி முகாம்களும் நடத்தப்பட்டு, கல்வி கடன்களும் வழங்கப்பட்டுள்ளன. கல்லுாரி கனவு திட்டம், புதுமைப்பெண் திட்டம் என பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அரசின் நலத்திட்டங்களை அறிந்து விண்ணப்பித்து பயன்பெற வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
முகாமில், மொத்தம், 793 பயனாளிகளுக்கு, 8.87 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.