ADDED : செப் 07, 2026 09:04 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, அமைதி நகரில் உள்ள கிணற்றில் குப்பை கொட்டப்படுவதால் அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட, 36வது வார்டு, அமைதி நகரில் திறந்தவெளிப் பகுதியில், 30 அடிக்கும் மேல் ஆழமான கிணறு உள்ளது. இந்த கிணற்றை சுற்றிலும் சுவர் மற்றும் கம்பி வேலி போன்ற பாதுகாப்பு வசதியில்லை.
மேலும், இவ்வழியாக செல்லும் நபர்கள், கிணற்றில் குப்பை மற்றும் இதர கழிவை கொட்டி செல்கின்றனர். மேலும், கிணற்றின் அருகே உள்ள தனியார் நிறுவனத்தின் கழிவு நீரை குழாய் வாயிலாக கிணற்றில் தேக்குகின்றனர். இதனால் கிணற்று நீர் மாசடைந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது.
இவ்வழியில் தினமும் ஏராளமானோர் பயணிப்பதால், சுவாச கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மக்கள் நலன் கருதி கிணற்றை சுத்தப்படுத்தி, குப்பையை அகற்ற வேண்டும். மேலும், யாரும் குப்பை கொட்டாதவாறு, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.
இது குறித்து, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் சப்–கலெக்டரிடம் மனு வழங்கியுள்ளனர்.
