/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புரட்டாசி சனிக்கிழமை விழா துவக்கம் காரமடை அரங்கநாதர் கோவிலில் கோலாகலம்
/
புரட்டாசி சனிக்கிழமை விழா துவக்கம் காரமடை அரங்கநாதர் கோவிலில் கோலாகலம்
புரட்டாசி சனிக்கிழமை விழா துவக்கம் காரமடை அரங்கநாதர் கோவிலில் கோலாகலம்
புரட்டாசி சனிக்கிழமை விழா துவக்கம் காரமடை அரங்கநாதர் கோவிலில் கோலாகலம்
ADDED : செப் 22, 2024 05:45 AM

காரமடை அரங்கநாதர் கோவில் உட்பட, கோவையில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும், புரட்டாசி மாத சனிக்கிழமை விழா, நேற்று கோலாகலமாக தொடங்கியது.
கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில் ஆகும். இக்கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை, வைகுண்ட ஏகாதசி, மாசி மகத் தேரோட்டம் ஆகிய விழாக்கள் வெகு விமர்சையாக நடைபெறும்.
இந்த ஆண்டு புரட்டாசி மாதம், கடந்த செவ்வாய் கிழமை துவங்கியது. இந்த மாதத்தில் வரும், ஐந்து சனிக்கிழமைகளில், அரங்கநாதர் கோவிலில் விழாக்கள் நடைபெறும். நேற்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை விழாவை முன்னிட்டு, அதிகாலை, 3:15 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
பின்பு மூலவர் அரங்கநாதர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. 4:00 மணிக்கு உற்சவர் அரங்கநாத பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, சிறப்பு அலங்காரத்தில், கோவில் வளாகத்தின் உள்ளே உலா வந்து, கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதைத் தொடர்ந்து, பக்தர்கள் தரிசனத்திற்கு விடப்பட்டனர். புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து, பெருமாளை வழிபட்டனர்.
இந்த கோவிலில், பக்தர்கள் தங்கள் கொண்டு வரும் அரிசி, பருப்பு, காய்கறி ஆகியவற்றை கோவிலின் வெளியே இருக்கும், நூற்றுக்கணக்கான தாசர்களுக்கு, படையல் இடுவர்.
அவர்கள் சங்கு ஊதியும், சேகண்டி அடித்தும் பூஜை செய்வர். பின்பு, தாசர்கள் வழங்கும், அரிசி, பருப்பு, காய்கறியை வாங்கிச் செல்லும் பக்தர்கள், பொங்கல் வைத்து, விரதத்தை முடிப்பது வழக்கம்.
நேற்று கோவில் முன் அமர்ந்திருந்த தாசர்களுக்கு, பக்தர்கள் அரிசி, பருப்பு, காய்கறிகளை படைத்து வழிபட்டனர். பின்பு அவர்கள் வழங்கிய உணவுப் பொருளை பக்தர்கள் பெற்றுச் சென்றனர். கோவில் முன், தாசர்கள் உட்கார, கோவில் நிர்வாகத்தின் சார்பில், மேல் கூரைகள் அமைத்து கொடுத்துள்ளனர்.
வருகிற, 28ம் தேதி இரண்டாம் சனிக்கிழமை விழாவும், அக்., 2ம் தேதி மஹாளய அமாவாசையும் நடைபெற உள்ளது. நாலாம் தேதி நவராத்திரி உற்சவம் துவங்குகிறது.