/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லைசென்ஸ் புதுப்பிப்பதில் கேள்விக்குறி... பொறியாளர்களுக்கு 'பொறி!'நேர்காணலில் பதில் தெரியாததால் 'தெறி!'
/
லைசென்ஸ் புதுப்பிப்பதில் கேள்விக்குறி... பொறியாளர்களுக்கு 'பொறி!'நேர்காணலில் பதில் தெரியாததால் 'தெறி!'
லைசென்ஸ் புதுப்பிப்பதில் கேள்விக்குறி... பொறியாளர்களுக்கு 'பொறி!'நேர்காணலில் பதில் தெரியாததால் 'தெறி!'
லைசென்ஸ் புதுப்பிப்பதில் கேள்விக்குறி... பொறியாளர்களுக்கு 'பொறி!'நேர்காணலில் பதில் தெரியாததால் 'தெறி!'
ADDED : மே 03, 2024 12:29 AM
-நமது நிருபர்-
பதிவு பெற்ற இன்ஜினியர்களுக்கு, நகர ஊரமைப்புத்துறையில் லைசென்ஸ் புதுப்பிப்பதற்கு நேர்காணல் நடத்தி, விதிமுறைகள் பற்றிக் கேள்விகள் கேட்டதில், இதுவரை 30 பேர் மட்டுமே தேறியுள்ளனர்.
தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள் --- 2019ன் படி, நகர ஊரமைப்புத் துறையில் வரைபட விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கு, இன்ஜினியர்கள் லைசென்ஸ்க்கு பதிவு செய்வதும், அதை உரிய காலத்தில் புதுப்பிப்பதும் கட்டாயம். இவ்வாறு பதிவு பெற்ற பொறியாளர்கள் தான் (எல்.பி.எஸ்.,), கட்டுமான விண்ணப்பங்களை 'ஆன்லைன்' முறையில் சமர்ப்பிக்க முடியும்.கோவையில் இப்போது 500க்கும் மேற்பட்ட பதிவு பெற்ற இன்ஜினியர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கான லைசென்ஸ், நகர ஊரமைப்புத் துறையால் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. உரிய காலத்துக்குள் 'ஆன்லைன்' முறையில் பணம் செலுத்தி, லைசென்ஸ்களை புதுப்பிப்பதே இதுவரை வழக்கமாக இருந்தது. ஆனால், இப்போது அப்படி விண்ணப்பித்தால், புதுப்பித்தல் தொகை ஏற்கப்படுவதில்லை.
பழைய நடைமுறைப்படி, வங்கியில் நேரடியாக புதுப்பித்தல் தொகையைச் செலுத்த வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கியில் அந்தத் தொகையைச் செலுத்திய பின், அதற்கான ரசீது மற்றும் கடந்த ஆண்டுகளின் அங்கீகாரச் சான்றிதழ், ஆதார், பான் கார்டு நகல் ஆகியவற்றை மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்; அதன்பின் நேர்காணல் நடத்தப்படுகிறது.
இதற்காக இன்ஜினியர்களுக்கு போனில் அழைப்பு விடுக்கப்படுகிறது. நேர்காணலில், தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள் - 2019ல் உள்ள பல்வேறு சட்ட திட்டங்களை உள்ளடக்கிய கேள்விகள் கேட்கப்படுகின்றன. விதிமுறைகள் பற்றி சரியாக பதில் சொல்லாவிட்டால், மீண்டும் சென்று படித்து விட்டு வருமாறு இன்ஜினியர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
இதுவரை நேர்காணலில் பங்கேற்றவர்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் தேறவில்லை. அவர்களுக்கு திரும்பவும் நேர்காணல் நடத்தப்படுமென்று இணை இயக்குனர் ராஜகுரு திருப்பி அனுப்பியுள்ளார்.
புதிதாக பதிவு செய்யும் இன்ஜினியர்களுக்கு இந்த நடைமுறை சரி; ஆனால் பல ஆண்டுகள் அனுபவமுள்ள இன்ஜினியர்களுக்கு இப்படிச் செய்யலாமா என்று கடும் அதிருப்தி எழுந்துள்ளது. விதிமுறைகள் பற்றித் தெரியாமல், இளம் இன்ஜினியர்கள் மட்டுமின்றி, 30, 35 ஆண்டுகள் அனுபவமுள்ள இன்ஜினியர்களும் நேர்காணலில் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
தமிழக அரசு 'ஆன்லைன்' முறையை ஊக்குவித்து வரும் நிலையில், லைசென்ஸ் புதுப்பிக்க மட்டும், இப்படி பழைய நடைமுறையைப் பின்பற்றுவது ஏன் என்று இன்ஜினியர்கள் குமுறுகின்றனர்; இதுபற்றி அரசுக்கும் கடிதம் எழுதியுள்ளனர்.
நேர்காணல் அவசியம் இல்லை!
''வளர்ச்சி மற்றும் கட்டட விதிகளின்படியே, திட்ட அனுமதிக்கு 'ஆன்லைன்' முறையில் வரைபடம் சமர்ப்பிக்க முடியும். விதிகளுக்கு உட்படாமல் இருந்தால், அது ஏற்கப்படுவதில்லை. அப்படியிருக்க, இன்ஜினியர்களுக்கு விதிமுறை குறித்த நேர்காணல் அவசியமில்லை. இதனால் கால விரயமாகிறது; அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க வேண்டும்.
- - இன்ஜினியர்கள்
நேர்காணல் அவசியம் தான்!
'இன்ஜினியர்களின் லைசென்ஸ் புதுப்பிக்கும் விண்ணப்பம் எதையும் நாங்கள் நிராகரிக்கவில்லை. அதற்கு எங்களுக்கு அதிகாரமும் இல்லை. ஆனால் பல இன்ஜினியர்கள் அடிப்படை விதிகளையே அறியாமல் இருக்கின்றனர். மக்களுக்கும் தவறான தகவலைத் தெரிவிக்கின்றனர். அதனால் தான், நேர்காணல் நடத்தி, தமிழ்நாடு வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள் 2019 ஐ படித்து விட்டு வரச் சொல்கிறோம். சரியாக பதில் சொன்ன, 30 பேருக்கு லைசென்ஸ் புதுப்பித்துள்ளோம்' என்றனர்.
- நகர ஊரமைப்பு அதிகாரிகள்