/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில்பாளையத்தில் ரயில்வே ஸ்டேஷன்; மீண்டும் துவங்க வேண்டுமென கோரிக்கை
/
கோவில்பாளையத்தில் ரயில்வே ஸ்டேஷன்; மீண்டும் துவங்க வேண்டுமென கோரிக்கை
கோவில்பாளையத்தில் ரயில்வே ஸ்டேஷன்; மீண்டும் துவங்க வேண்டுமென கோரிக்கை
கோவில்பாளையத்தில் ரயில்வே ஸ்டேஷன்; மீண்டும் துவங்க வேண்டுமென கோரிக்கை
ADDED : அக் 08, 2024 12:17 AM

கிணத்துக்கடவு : பொள்ளாச்சி - கிணத்துக்கடவு வழித்தடத்தில் உள்ள, கோவில்பாளையம் ரயில்வே ஸ்டேஷனை மீண்டும் ஏற்படுத்த வேண்டுமென, மக்கள் வலியுறுத்துகின்றனர்.
பொள்ளாச்சி - கிணத்துக்கடவு ரயில் வழித்தடத்தில், 1914ம் ஆண்டு கோவில்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் அமைக்கப்பட்டது. இதன் வாயிலாக, பல அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பயணித்து வந்தனர்.
அப்போதே, இந்த ரயில்வே ஸ்டேஷனில் குடியிருப்பு கட்டப்பட்டது. ரயில்வே பயன்பாட்டிற்காக கிணறும் அமைக்கப்பட்டது. இந்த ரயில்வே ஸ்டேஷனுக்கு என, 16 ஏக்கர் 15 சென்ட் நிலம் உள்ளது.
வணிகம் செய்பவர்கள், முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்தி வந்த, சிறப்பு வாய்ந்த ரயில்வே ஸ்டேஷன், கடந்த, 1990ம் ஆண்டு மூடப்பட்டது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டனர். அகல ரயில்பாதை பணிகள் நிறைவடையும் போது, கோவில்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் திறக்கப்படும் என, மக்கள் காத்திருந்தனர். ஆனால், கோவில்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் திறக்கப்படவில்லை.
இதற்காக, சுற்றுப்பகுதியில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் சில ஆண்டுகளுக்கு முன், கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதையெல்லாம், மத்திய ரயில்வே அமைச்சகத்துக்கு அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
தற்போது, கோவில்பாளையம் சுற்று வட்டாரத்தில் மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் தொழில் சார்ந்த நிறுவனங்கள் ஏராளமாக உள்ளதால், பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும், கேரள மாநில மக்கள் அதிகளவில் வந்து செல்லும், சூலக்கல் மாரியம்மன் கோவிலானது, ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சில கி.மீ., தொலைவில் உள்ளது.
இங்கு மீண்டும் ரயில்வே ஸ்டேஷன் துவங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான இட வசதி இருப்பதால், கூட்ஸ் ரயில் சேவையை இப்பகுதி மக்கள் மற்றும் நிறுவனங்கள் எதிர்பார்கின்றனர். இதனால் இப்பகுதி மேலும், வளர்ச்சி அடைவதுடன், புதிய வியாபாரிகள் உருவாவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும். அத்துடன் ரயில்வே போக்குவரத்தையும் மக்கள் பலர் பயன்படுத்துவார்கள்.
10 கி.மீ.,க்கு ஒரு ரயில்வே ஸ்டேஷன் இருக்கலாம் என விதிமுறை உள்ளது. ஆனால் பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு 20 கி.மீ., இடைவெளியில் இருக்கிறது. ரயில் நிற்க முறையான புவியியல் அமைப்பு மற்றும் கூட்ஸ் ரயில் நின்று செல்ல கேட், கூட்ஸ் செட் அமைக்க போதிய இடம் என அனைத்து அம்சங்களும் இங்கு உள்ளது.
அரசு பல இடங்களில் புதிதாக ரயில்வே ஸ்டேஷன் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆனால், நல்ல நிலையில் இருந்து கைவிடப்பட்ட இந்த ஸ்டேஷனை மீண்டும் துவங்க வேண்டும், என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.