ராம சாய் பாபா பிரதிஷ்டை: திரளான பக்தர்கள் பங்கேற்பு
ராம சாய் பாபா பிரதிஷ்டை: திரளான பக்தர்கள் பங்கேற்பு
UPDATED : அக் 21, 2026 05:44 PM
ADDED : அக் 21, 2026 05:36 PM

பெ.நா.பாளையம்: பெரியதடாகம் லலிதாம்பிகை கோவில் அருகே புதிதாக ஸ்ரீ ராம சாய் பாபா பிரதிஷ்டை விழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பெரியதடாகம் லலிதாம்பிகை திருக்கோயில் எதிரே உள்ள ஆஞ்சநேயர் சன்னதியில் புதிதாக ராம சாய் பாபா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை ஒட்டி, லலிதாம்பிகை திருக்கோவிலில் கமலா தாரணி அம்பாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவில், லலிதாம்பிகை டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் சுவாமி ஜகதாத்மானந்தா சரஸ்வதி பேசுகையில், நாட்டில் அமைதியும், ஒற்றுமையும் நிலவிட, லலிதாம்பிகை திருக்கோவிலில் தொடர்ந்து பல்வேறு வழிபாடுகளை நடத்தி வருகிறோம். நவராத்திரி நிறைவு நாளில், மக்கள் ஒற்றுமையோடும், மகிழ்ச்சியோடும் வாழ்வதற்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதே போல ஆன்மிக அறக்கட்டளையின் வாயிலாக பல்வேறு நலத்திட்டங்களை, ஏழை மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி குழந்தைகள் பயன்படும் வகையில் செயல்படுத்தி வருகிறோம் என்றார். விழாவையொட்டி அன்னதானம் நடந்தது.
