ADDED : செப் 20, 2026 04:52 PM
வால்பாறை: வால்பாறையில் உள்ள ரேஷன் கடைகளில் இ.கே.ஒய்.சி., சிறப்பு முகாம் நடந்தது.
வால்பாறை தாலுகாவில் அமுதம், சிந்தாமணி மற்றும் மகளிர் சுய உதவிக்குழு ரேஷன் கடைகள் உட்பட, மொத்தம், 47 ரேஷன் கடைகளில், 16,558 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொதுவினியோக திட்டத்தில் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் ரேஷன் பொருட்கள் வாங்கும் மக்கள், கை ரேகை பதிவு செய்யும் வகையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறப்பு முகாம் நடந்தது. வால்பாறை தாலுகாவில் இது வரை, 80 சதவீதம் ரேஷன்கார்டுதாரர்கள் கடைகளில் கை ரேகை பதிவு செய்துள்ளனர்.
வட்ட வழங்கல் துறை வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் கூறுகையில், ‘‘வால்பாறையில் அந்தியோதயா அன்னயோஜ திட்டத்தின் கீழ், 2,749 ரேஷன்கார்டுகள் உள்ளன. இந்த திட்டத்தின் கீழ், ரேஷன் பொருட்கள் பெறும் அனைவரும் அந்தந்த ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்ய வேண்டும்.
‘‘கடந்த, 2023 முதல் இந்த பணி நடக்கிறது. இ.கே.ஒய்.சி., பதிவு செய்யாத குடும்ப உறுப்பினர்கள் உடனடியாக, அந்தந்த ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்ய வேண்டும்,’’ என்றார்.
