/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷன் கடைகள் மூடல்; பொது மக்கள் தவிப்பு
/
ரேஷன் கடைகள் மூடல்; பொது மக்கள் தவிப்பு
ADDED : அக் 07, 2025 11:04 PM
அன்னுார்; கோவை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக நேற்றும் 145 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களும், அவற்றின் கீழ் உள்ள 1,000 ரேஷன் கடைகளும் செயல்படவில்லை.
ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு விரைவில் நிதி பயன் வழங்க வேண்டும். ஒய்வு பெற்றவர்களுக்கு வழங்கும் 1,000 ரூபாய் பென்சனை 5,000 ஆக உயர்த்த வேண்டும். சங்கங்களுக்கு அரசு தரவேண்டிய ஏழு சதவீத வட்டி பல ஆண்டுகள் நிலுவை உள்ளதை உடனே வழங்க வேண்டும்.
மாவட்ட அளவில் பணி மூப்பு பட்டியல் தயார் செய்து அதன் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். ரேஷன் கடை பணியாளர்களுக்கும் சம்பள உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் கடந்த 6ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தை அறிவித்தது.
இரண்டாவது நாளாக நேற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள 145 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படவில்லை. வங்கி சேவைக்காக வந்த விவசாயிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு கீழ் செயல்படும் 1,000க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளும் நேற்று செயல்படவில்லை. தீபாவளிக்கு இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில் ரேஷன் கடைகள் மூடப்பட்டதால் மக்கள் தவிப்புக்கு உள்ளாகினர்.
'மூன்றாவது நாளாக இன்றும் வேலை நிறுத்தம் தொடரும்,' என சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.