ரேஷன் கடைகளில் சர்வர் 'டவுன்' :பொருட்கள் வாங்க காத்திருப்பு
ரேஷன் கடைகளில் சர்வர் 'டவுன்' :பொருட்கள் வாங்க காத்திருப்பு
UPDATED : ஆக 18, 2026 07:34 PM
ADDED : ஆக 18, 2026 07:31 PM
அன்னுார்: சர்வர் முடக்கத்தால் ரேஷன் கடைகளில் நீண்ட நேரம் காத்திருந்து பொருட்கள் வாங்க வேண்டியுள்ளது.
அன்னுார் தாலுகாவில், மூன்று பேரூராட்சிகள், 28 ஊராட்சிகள் உள்ளன. இதில் பகுதி நேரம் மற்றும் முழு நேரம் என, 87 ரேஷன் கடைகள் உள்ளன. 60,000க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். கடந்த ஒரு வாரமாக காலை நேரத்தில் ரேஷன் கார்டுதாரர்களின் விரல் ரேகை சரியாக பதிவாகாமல் சர்வர் முடங்குகிறது. இணைய வேகமும் குறைவாக உள்ளது. இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து, சர்வர் சரியான பின், இணையதளம் இணைப்பு கிடைத்த பின், பொருட்கள் வாங்க வேண்டியுள்ளது.
பொதுமக்கள் கூறுகையில், ''நவீனமான பி.ஓ.எஸ்., கருவிகளை ரேஷன் கடைகளுக்கு வழங்க வேண்டும். தங்கு தடை இல்லாமல் அதிக வேகம் உள்ள இன்டர்நெட் இணைப்பு தர வேண்டும். தற்போது நீண்ட நேரம் பொருள் வாங்க ரேஷன் கடையில் காத்திருப்பதால், சிரமத்திற்கு உள்ளாகிறோம்' என்றனர்.
