/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கலைத்திறனால் கவர்ந்த வாசகியர்
/
கலைத்திறனால் கவர்ந்த வாசகியர்
ADDED : ஜன 06, 2026 05:10 AM

கோவை: 'தினமலர் ' நாளிதழ் நடத்தி வரும், 'மார்கழி விழாக்கோலம்' போட்டியில், மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் வாசகியர், ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஹட்கோ காலனி ஹவுசிங் யூனிட் வளாகத்தில், நேற்று (ஜன. 5), கோலப்போட்டிகள் நடந்தன. புள்ளிக்கோலம், ரங்கோலி மற்றும் ஆர்ட் கோலம் ஆகிய மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. 48 வாசகியர், வண்ணமயமான கோலங்களால் அந்த இடத்தையே கலைக்கூடமாக மாற்றினர்.
ரங்கோலி பிரிவில் பங்கேற்ற வாசகி அமுதா கூறுகையில், வயது முதிர்வு காரணமாக பொதுவாக போட்டிகளில் பங்கேற்க தயக்கம் இருக்கும். மற்றவர்கள் ஏளனம் செய்வார்களோ என்ற எண்ணமும் வரும். ஆனால், இதுபோன்ற கோலப்போட்டிகள், வயது வித்தியாசமின்றி எங்களை உற்சாகப்படுத்துகின்றன, என்றார்.
ஆர்ட் பிரிவில் பங்கேற்ற வாசகி அன்பரசி, எனக்கு வரைவதில் அதிக விருப்பம் உண்டு.
அதனை வெளிப்படுத்த இப்போட்டி, ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது. முருகப்பெருமானின் 'வேலும் மயிலும்' துணை என்பதை, கோலத்தின் வழியே காட்சிப்படுத்தியுள்ளேன், என தெரிவித்தார்.
புள்ளிக்கோலப் பிரிவில் வென்ற ஜான்சி பேசுகையில், இன்றைய இளம் தலைமுறையினர் புள்ளிக்கோலத்தின் மீதான ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, அதில் புதுமையை புகுத்தி வண்ண புள்ளிக்கோலத்தை வரைந்தேன், என்றார்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, ஹட்கோ காலனி முன்னாள் தலைவர் ராஜாராம், பொருளாளர் மற்றும் இணை செயலாளர் மாணிக்கம், ஒருங்கிணைப்பாளர் ஜான்சி ராணி ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.
வரும் 11ம் தேதி வரை நடைபெறும் இந்த மார்கழிவிழா கோலப்போட்டியை, தினமலர் நாளிதழுடன் போத்தீஸ், கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி, ஓட்டல் ஆனந்தாஸ் மற்றும் யாழி நிறுவனங்கள் இணைந்து வழங்கின.

