‘பாரதியின் எழுத்துக்களை வாசித்தால் அச்சம் விலகும்’
‘பாரதியின் எழுத்துக்களை வாசித்தால் அச்சம் விலகும்’
UPDATED : அக் 12, 2026 08:17 PM
ADDED : அக் 12, 2026 08:14 PM

அன்னூர்: 'பாரதியின் எழுத்துக்களை வாசித்தால், அச்சம் விலகும்,' என, பேச்சாளர் பாரதி கிருஷ்ணகுமார் அன்னூரில் பேசினார்.
பாரதி சிந்தனையாளர் பணி மையம் மற்றும் பாரதி மூத்தோர் பாலர் அறக்கட்டளை சார்பில், பாரதி விழா அன்னூரில் நடந்தது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு, கட்டுரை, பேச்சு மற்றும் இசை போட்டி நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு, ரொக்கம், கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பாரதி சிந்தனையாளர் பணி மைய நிறுவனர் டாக்டர் கோவி தலைமை வகித்தார்.
பேச்சாளர் பாரதி கிருஷ்ணகுமார் பேசுகையில், 110 ஆண்டுகளுக்கு முன்பே பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் குழந்தை திருமணத்திற்கு எதிராக பேசி, எழுதி, போராடியவர். விடுதலைப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி, எழுத்தாளர், கவிஞர் என பல முகங்கள் கொண்டவர் பாரதி. இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு, வங்காளம், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளை அறிந்திருந்தார். சிறுகதை, நாவல், கவிதை, பாடல்கள் என, 18 ஆயிரம் பக்கம் எழுதியுள்ளார். பாரதியின் எழுத்துக்களை வாசித்தால், தன்னம்பிக்கை பிறக்கும். அச்சம் விலகும். சமூக அக்கறை உண்டாகும், என்றார்.
பணி மைய தலைவர் சுப்பையன், கவிஞர் கண்ணன் குமார், நிர்வாகி பிரபு, பாரதி பாலர் அறக்கட்டளை தலைவர் விஜய சண்முகம், உலக தமிழ் சிற்றிதழ் சங்க தலைவர் ரவீந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
