தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தைப்பட்டத்துக்கு ஆயத்தம்!

 தைப்பட்டத்துக்கு ஆயத்தம்!

 தைப்பட்டத்துக்கு ஆயத்தம்!


ADDED : ஜன 07, 2026 05:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 07, 2026 05:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

 பண்ணைகளில் காய்கறி நாற்றுகள் உற்பத்தி  நடப்பாண்டு சாகுபடி அதிகரிக்க வாய்ப்பு

உடுமலை: உடுமலை பகுதிகளில், தை பட்டத்தில், தக்காளி, மிளகாய், கத்தரி உள்ளிட்ட காய்கறி பயிர்கள் விவசாயிகள் சாகுபடி மேற்கொள்ள தயாராகி வரும் நிலையில், நாற்றுப்பண்ணைகளில் நாற்றுக்கள் உற்பத்தி தீவிரமாக நடக்கிறது.

உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரத்தில், காய்கறி பயிர் சாகுபடி அதிகரித்துள்ளது. குறைந்த கால சாகுபடி, மகசூல், வருவாய் என்ற அடிப்படையில் விவசாயிகள் காய்கறி சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்பகுதிகளில், தக்காளி, சின்ன வெங்காயம், கத்தரி, பீட்ரூட், காலிப்பிளவர், மிளகாய், சாம்பல் பூசணி, அரசாணிக்காய் என பல்வேறு காய்கறி பயிர்கள், 40 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

வீரிய ஒட்டு ரக விதைகள் வருகைக்கு முன், விவசாயிகளே வயல்களில் நாற்றுக்களை தயாரித்து, நடவு செய்து சாகுபடி செய்து வந்தனர். தொழில்நுட்ப வளர்ச்சியால், வீரிய ஒட்டு ரகம், அதிக மகசூல் தரும் ரகங்கள் என விதைகள் வந்துள்ளன.

இந்த விதைகள் நடவு, வளர்ப்பு உள்ளிட்ட சிக்கல்கள் உள்ளன. இதற்கு தீர்வாக, விவசாயிகளுக்கு உதவும் வகையில், நாற்றுப்பண்ணைகள் அமைக்கப்பட்டு, 20 முதல் 30 நாட்கள் வரை வளர்ந்த நாற்றுக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் சுற்றுப்பகுதிகளில், 40க்கும் மேற்பட்ட நாற்றுப்பண்ணைகள் அமைந்துள்ளன. ஒவ்வொன்றும், தலா, ஏழு லட்சம் முதல் 20 லட்சம் நாற்றுக்கள் வரை உற்பத்தி செய்யும் திறன் உள்ள நாற்றுப்பண்ணைகள் விவசாயிகளால் அமைக்கப்பட்டுள்ளது. இப்பண்ணைகளில், குழித்தட்டு முறையில் காய்கறி நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு ஏக்கருக்கு, தக்காளி நாற்றுக்கள், 10 ஆயிரம் தேவைப்படுகிறது. அதே போல், மிளகாய் நாற்றுக்கள், 7 ஆயிரம்; கத்தரி, 5 ஆயிரம்; காலிப்பிளவர், 10 ஆயிரம் நாற்றுக்கள் நடவு செய்யப்படுகிறது.

தக்காளி நாற்று, வீரிய ரகத்தை பொறுத்து, 60 காசு முதல், ஒரு ரூபாய் வரையும், மிளகாய், 90 காசு முதல் ஒரு ரூபாய் வரையும், கத்தரி, 70 காசு, காலிப்ளவர், 90 காசு முதல் ஒரு ரூபாய் வரையும், சாம்பல் பூசணி, ரூ. 1.35 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டை காட்டிலும், நடப்பாண்டு நாற்றுக்கள் விலை, 10 காசு வரை உயர்ந்துள்ளது.

தக்காளி நாற்று, 22 நாட்களிலும், மற்ற காய்கறி நாற்றுக்கள், 30 நாட்களிலும் விவசாயிகள் வாங்கி நடவு செய்கின்றனர். இதனால், விவசாயிகளுக்கு சாகுபடி செலவு அதிகரித்தாலும், குறைந்த நாட்களில், மகசூல் எடுக்க முடிகிறது. இதனால், காய்கறி சாகுபடி பரப்பும் அதிகரித்து வருகிறது.

நாற்றுப்பண்ணை உரிமையாளர்கள் கூறியதாவது: உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் மற்றும் சுற்றுப்பகுதிகளில், தக்காளி, மிளகாய், கத்தரி உள்ளிட்ட காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.பெரும்பாலும், காய்கறி பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் குறைந்த பரப்பளவிலேயே சாகுபடி செய்கின்றனர். இதற்காக, நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நேரடியாக நாற்று உற்பத்தி செய்ய முடியாது. அதனால், நாற்றுப்பண்ணைகளிலிருந்து நேரடியாக நாற்றுக்கள் வாங்கி நடவு செய்கின்றனர்.

சீசனுக்கு ஏற்ப நாற்று உற்பத்தி செய்யப்படுகிறது. நாற்று உற்பத்திக்கு பயன்படுத்தப்படும், தென்னை நார் கழிவு (கோகோபித்) ஒரு டிராக்டர், ரூ. 8 ஆயிரம் வரை விற்றது. தற்போது, தேங்காய் மட்டை விலை உயர்வு காரணமாக, ஒரு டிராக்டர் நார் கழிவு 18 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது.

அதே போல், விதைகளும், ஒரு பாக்கெட்டிற்கு, ரூ. 50 வரை உயந்துள்ளதால், நாற்றுக்கள் விலை உயர்ந்துள்ளது. தற்போது, தை பட்டத்தில் காய்கறி சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.

இதற்காக, நாற்றுப்பண்ணைகளில் பதிவு துவக்கப்பட்டு, உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தை, மாசி என இரு மாதங்களில், காய்கறி சாகுபடி பரப்பு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

இவ்வாறு, கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us