/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆறு கேரள ரயில்கள் கோவைக்கு வராமல் திருப்புவதற்கு பரிந்துரை
/
ஆறு கேரள ரயில்கள் கோவைக்கு வராமல் திருப்புவதற்கு பரிந்துரை
ஆறு கேரள ரயில்கள் கோவைக்கு வராமல் திருப்புவதற்கு பரிந்துரை
ஆறு கேரள ரயில்கள் கோவைக்கு வராமல் திருப்புவதற்கு பரிந்துரை
ADDED : பிப் 22, 2024 05:30 AM

கோவை சந்திப்பை ஏற்கனவே, பல கேரள ரயில்கள் புறக்கணித்து வரும் நிலையில், மேலும் 6 ரயில்களை கோவைக்கு வராமல் திருப்புவதற்கு, பரிந்துரை தயார் செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், கேரளாவிலிருந்து இயக்கப்படும் பெரும்பாலான ரயில்கள், கோவை வழியாகவே கடந்து செல்கின்றன. இந்த ரயில்கள் இயக்கப்பட்ட காலத்திலிருந்து, கோவை சந்திப்பு வழியாகவே இயக்கப்பட்டு வந்தன.
ஆனால், வடகோவை - இருகூர் இருவழிப்பாதை பணிகளைக் காரணம் காட்டி, 13 ரயில்கள், போத்தனுார் வழியே கேரளாவுக்கு இயக்கப்பட்டன.
போகும் போதும், வரும்போதுமாக மொத்தம் 26 ரயில் சேவைகளில், கோவை சந்திப்பு புறக்கணிக்கப்பட்டது.
2012ல் இந்தப் பணி முடிவடைந்த பின்னும், கேரளா ரயில்கள், கோவை சந்திப்புக்குத் திருப்பப்படவில்லை. இந்த ரயில்களைத் திருப்புவதையே, முக்கியக் கோரிக்கையாக வைத்து, ரயில்வே போராட்டக்குழு துவங்கப்பட்டது.
தொடர் போராட்டங்களால், 13 ரயில்களில் முக்கியமான நான்கு ரயில்கள் திருப்பப்பட்டு, மற்ற ரயில்கள் அடுத்தடுத்து கோவை சந்திப்புக்கு திருப்பப்படும் என்று கூறப்பட்டது.
ஆனால் ஏழு ரயில்கள் இரு வழியான சேவைகளிலும், ஒரு ரயில் ஒரு வழிச் சேவையிலுமாக, 15 ரயில் சேவைகளில் கோவை சந்திப்பு, இன்று வரை புறக்கணிக்கப்படுகிறது.
கோட்டயம்-சென்னை எக்ஸ்பிரஸ், சென்னை-திருவனந்தபுரம் எகஸ்பிரஸ், டாடா நகர்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ், சென்னை-மங்களூரு எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம்-பெங்களூரு எக்ஸ்பிரஸ், ஹூப்ளி-கொச்சுவேலி எக்ஸ்பிரஸ், சென்னை-மங்களூரு எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் இரு வழிகளிலும், மங்களூரு-தாம்பரம் ரயில் ஒரு வழியிலும், கோவை சந்திப்புக்கு வராமல் செல்கின்றன.
இவற்றை, கோவை சந்திப்பு வழியாக இயக்க வேண்டுமென்று, கோவையிலுள்ள தொழில் அமைப்பினர், மக்கள் பிரதிநிதிகள் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வரும் 28ம் தேதியன்று, சேலம் கோட்டத்துக்குட்பட்ட எம்.பி.,க்கள் கூட்டத்துக்கான தீர்மானங்களில், மேலும் ஆறு கேரளா ரயில்களை, கோவைக்கு வராமல் திருப்புவதற்கான பரிந்துரை இடம் பெற்றுள்ளது.
ஆழப்புழா-சென்னை எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம்-டெல்லி கேரளா எக்ஸ்பிரஸ், கன்யாகுமரி-திர்புர்கார் எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம்-பாட்னா, கொச்சுவேலி-யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் மற்றும் எர்ணாகுளம்-பாட்னா வாரமிரு முறை ரயில் ஆகிய ஆறு ரயில்களை, கோவை சந்திப்புக்கு வராமல் போத்தனுார் வழியே திருப்புவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில்களில், பல்லாயிரக்கணக்கான பயணிகள், கோவை சந்திப்பிலிருந்து சென்னை, டெல்லி, பெங்களூரு மற்றும் வட மாநில நகரங்களுக்குச் செல்கின்றனர்.
போத்தனுார் வழியே செல்லும் 15 கேரள ரயில்களை, கோவைக்குத் திருப்ப வேண்டுமென்ற கோரிக்கைக்கு மாறாக, மேலும் 6 ரயில்களைத் திருப்புவதற்கு தெற்கு ரயில்வே பரிந்துரைத்திருப்பது, கோவை மக்களிடம் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
-நமது சிறப்பு நிருபர்-