/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சிக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் மீட்பு
/
மாநகராட்சிக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் மீட்பு
ADDED : மார் 01, 2024 10:59 PM
சரவணம்பட்டி:தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம், ஆக்கிரமித்த ஒரு ஏக்கர் சமுதாய கூடத்துக்கான இடத்தை, மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர்.
கோவை, மாநகராட்சி சரவணம்பட்டியில் வி.கே.வி., குமரகுரு நகரில், சமுதாயக்கூடத்துக்கு ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிலத்தை, அருகில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம், பூங்கா அமைத்து, அதன் பயன்பாட்டிற்கு எடுத்துக் கொண்டது.
அப்பகுதி மக்கள் அளித்த புகாரில், 'சரவணம்பட்டி பேரூராட்சியாக இருந்தபோது, 1986ல் வி.கே.வி., குமரகுரு நகர் உருவானது. அப்போது, ஒரு ஏக்கர் நிலம், சமுதாய கூடத்திற்கும், பூங்காவுக்கும் ஒதுக்கப்பட்டது. மாநகராட்சியுடன் இணைந்தபோது, ஒரு ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்துடன், மாநகராட்சி எல்லை முடிவடைகிறது; கீரணத்தம் ஊராட்சி தொடங்குகிறது.
இதன் அருகில், நிலம் வாங்கிய ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம், குமரகுரு நகரில் சமுதாய கூட இடத்தில் பூங்கா அமைத்து ஆக்கிரமித்துள்ளது; நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரியிருந்தனர்.
புகாரின்பேரில் நேற்று, மாநகராட்சி 4வது வார்டு உதவி இன்ஜினியர் சக்திவேல், வடக்கு மண்டல நகரமைப்பு தலைவர் எழில், கவுன்சிலர்கள் பார்வையிட்டனர்.
பூங்கா அமைக்கும் பணியை நிறுத்தவும், ஒரு வார காலத்திற்குள் முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளவும், கால அவகாசம் அளித்து நோட்டீஸ் ஒட்டினர்.

