/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிவப்பு கூன் வண்டு தாக்குதல் வேளாண் மாணவர்கள் விளக்கம்
/
சிவப்பு கூன் வண்டு தாக்குதல் வேளாண் மாணவர்கள் விளக்கம்
சிவப்பு கூன் வண்டு தாக்குதல் வேளாண் மாணவர்கள் விளக்கம்
சிவப்பு கூன் வண்டு தாக்குதல் வேளாண் மாணவர்கள் விளக்கம்
ADDED : பிப் 28, 2026 06:10 AM
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே வட்டப்பாறை புதூரில் சிவப்பு கூன் வண்டு தாக்குதல் குறித்து வேளாண் மாணவர்கள் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.
தென்னை மற்றும் பனை மரங்களில் அதிக சேதத்தை ஏற்படுத்தும் முக்கிய பூச்சியாக, சிவப்பு கூன் வண்டு உள்ளது.
இது, மரத்தின் மென்மையான பகுதியை துளையிட்டு நுழைந்து, உள்ளிருக்கும் திசுக்களை தின்று சேதப்படுத்துகிறது.
தாக்குதல் ஏற்பட்ட மரங்களில் முதலில் மைய கொத்து இலைகள் சுருங்குதல், மஞ்சள் நிறமாக மாறுதல், இலைகள் சாய்வு, வளர்ச்சி தடைபடுதல் போன்ற அறிகுறிகள் காணப்படும். மேலும், தண்டுப் பகுதியில் சிறிய துளைகள் ஏற்பட்டு அவற்றிலிருந்து பழுப்பு நிற சாறு வடிதல், நார் போன்ற கழிவுகள் வெளியேறுதல் போன்ற அறிகுறிகளும் தென்படும். தாக்குதல் கடுமையாக இருந்தால், மைய கொத்து இலைகள் முற்றிலும் உலர்ந்து, மரம் பட்டுப் போகும் நிலையும் ஏற்படலாம்.
இதை கட்டுப்படுத்த சிறந்த முறையாக, பெரோமோன் பொறி பயன்படுகிறது. ஒரு பிளாஸ்டிக் கூடைக்குள் சலவைத் துாள் அல்லது மோனோ குரோட்டோபாஸை நீருடன் கலந்து ஊற்றி, சிவப்பு கூன் வண்டை கவரும் பெரோமோன் மருந்தை அதில் கட்டி, தாக்குதல் காணப்படும் மரத்துக்கு அருகில் உள்ள மரத்தில் கட்ட வேண்டும்.
சில நாட்களிலேயே வண்டுகள் பெரோமோன் வாசனைக்கு சென்று கூடைக்குள் விழுந்து, தண்ணீரில் மிதந்து அழியும்.
இதன் வாயிலாக ரசாயன மருந்துகள் பயன்பாட்டை குறைத்து, சுற்றுச் சூழல் பாதிக்காத வண்ணம், சிவப்பு கூன் வண்டை எளிதில் கட்டுப்படுத்தலாம் என, மாணவர்கள் செயல் விளக்கம் அளித்தனர்.
விவசாயிகளின் கேள்விகளுக்கு ஆலோசனையும் வழங்கினர்.

