/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோடு விரிவாக்கத்துக்காக வெட்டாமல் மரங்களுக்கு மறுவாழ்வு! நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை
/
ரோடு விரிவாக்கத்துக்காக வெட்டாமல் மரங்களுக்கு மறுவாழ்வு! நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை
ரோடு விரிவாக்கத்துக்காக வெட்டாமல் மரங்களுக்கு மறுவாழ்வு! நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை
ரோடு விரிவாக்கத்துக்காக வெட்டாமல் மரங்களுக்கு மறுவாழ்வு! நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை
ADDED : அக் 23, 2024 10:19 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் ரோடு விரிவாக்கத்துக்காக மரங்களை வெட்டுவதை கைவிட்டு, மறுநடவு திட்டம் செயல்படுத்தப்படுகின்றன. இதனால், பல ஆண்டு பழமை வாய்ந்த மரங்கள் காக்கப்பட்டுள்ளதால் இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
'மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம்' என ஒரு பக்கம் விழிப்புணர்வு; மற்றொரு புறம் வளர்ச்சிப்பணிகள் என்ற பெயரில் மரங்கள் வெட்டி சாய்க்கும் நிலை தான் காணப்படுகிறது. ஒரு மரம் வளர பல ஆண்டுகளாகின்றன. அதை வெட்ட ஒரு நிமிடம் போதும்.
ரோடு விரிவாக்கம், வளர்ச்சிப்பணிகளுக்காக பல ஆண்டுகளாக வளர்ந்த மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. இதனால், பசுமையான சாலைகள் மாயமாகி வருகின்றன.
இந்நிலையில், ரோடு விரிவாக்கத்துக்காக மரங்களை வெட்டி சாய்க்காமல் அவற்றை பாதுகாக்க, மரங்கள் மறுவாழ்வு திட்டத்தை நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டுள்ளது.
அவிநாசி - திருப்பூர் - பல்லடம் - பொள்ளாச்சி - கொச்சின் (வழி) மீன்கரை ரோட்டில் காட்டம்பட்டி, நெகமம், புளியம்பட்டி, மீனாட்சிபுரம் பகுதிகளில் இருவழிச்சாலை, நான்குவழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிக்கு நிர்வாக ஒப்புதல், சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 37 கோடி ரூபாய்க்கு பெறப்பட்டுள்ளது.
அதில், பொள்ளாச்சி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்துக்கு உட்பட்ட புளியம்பட்டி பகுதியில், 600 மீட்டர் சாலை பகுதி நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இப்பணிக்கு இடையூறாக உள்ள, 22 மரங்கள் கண்டறியப்பட்டு மறு நடவு செய்ய வாய்ப்புள்ள, 17 மரங்களை மறு நடவு செய்யவும், மீதம் உள்ள, 5 மரங்கள் வெட்டி அகற்றவும் அனுமதி பெறப்பட்டதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோன்று ஆனைமலை அருகே துறையூர் மேடு சந்திப்பு பகுதியில், 17 மரங்கள் மறு நடவு செய்யப்பட்டன.
அதிகாரிகள் கூறியதாவது:
ரோடு விரிவாக்கத்துக்காக மரங்களை வெட்டுவதை கைவிட்டு, மறுநடவு செய்ய வாய்ப்புள்ள மரங்களை மாவட்ட பசுமைக்குழு பிரதிநிதி சையத் உடன் இணைந்து ஆய்வு செய்யப்பட்டது. அதில், 17 மரங்கள் கண்டறியப்பட்டு, போதிய பாதுகாப்புடன் மறுநடவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில், 5 மரங்கள் இதுபோன்று மாற்று இடத்தில் மறு நடவு செய்யப்பட்டன. மரங்கள் பாதுகாப்பினை உறுதி செய்து பசுமையை காக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு, கூறினர்.
மரங்கள் மறுநடவு சிறப்பு நிபுணர் சையத் கூறியதாவது:
ரோடு விரிவாக்கம் என்றாலே மரங்களை வெட்டுவதே முதல் வேலை. அதன்பிறகே, ரோடு அளவீடு பணிகள் நடக்கும். 'கீரின் கேர்' அமைப்பு உள்ளிட்ட பல அமைப்புகள், மரங்களை வெட்டுவதை தடுக்க வேண்டுமென வலியறுத்தி வந்தோம். கோவை மாவட்டத்தில், பசுமைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது, விரிவாக்கம் செய்யப்படும் ரோடுகளை அளந்து, மரங்கள் கள ஆய்வு செய்யப்படும். மரங்களை வெட்ட அனுமதி கொடுத்தாலும், பணிகள் நடக்கும் போது மட்டுமே வெட்ட வேண்டும் என அறிவுறுத்தப்படும்.
பல்லடம் ரோட்டில், 22 மரங்களில், 17 மரங்கள் காப்பாற்றப்பட்டுள்ளன; ஐந்து மரங்கள் மட்டுமே வெட்டப்பட்டுள்ளன. இதுபோன்று நடவடிக்கையால் மரங்கள் காப்பாற்றப்படுவதுடன், பசுமை மீட்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.