/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றம்
/
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ADDED : டிச 23, 2024 10:18 PM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி கோட்ட நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட பல்லடம் ரோடு, வால்பாறை ரோடு, பாலக்காடு ரோடு, மீன்கரை ரோடுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டது. ஆனாலும், ஆக்கரமிப்புகள் அகற்றவில்லை என கூறப்படுகிறது. இதனால், கோர்ட் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, வக்கீல் ஆணையர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில், தற்போது சாலையோரத்தில் இருந்த கோவில்கள், கடைகள், வீடுகளின் முன் இருந்த தற்காலிக மற்றும் நிரந்தர ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றும் பணி நடக்கிறது.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, பொள்ளாச்சி நெடுஞ்சாலைத்துறை கோட்டம், சுல்தான்பேட்டை, காமநாயக்கன்பாளையம் முதல் நெகமம் வரையுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
சாலையோரத்தில் நெடுஞ்சாலைத்துறை இடத்தில் உள்ள கோவில்கள், கடைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் குறித்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன.
சிலர் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். இப்பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இது தொடர்பான அறிக்கை வரும், ஜன., 8ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ளது.
இவ்வாறு, கூறினர்.