24 மணி நேர குடிநீர் திட்டத்தில் மீண்டும் மீண்டும் பாதிப்பு
24 மணி நேர குடிநீர் திட்டத்தில் மீண்டும் மீண்டும் பாதிப்பு
ADDED : செப் 09, 2026 05:31 PM
கோவை: மாநகராட்சி பகுதிகளில் 24 மணி நேரம் குடிநீர் விநியோகம் செய்வதற்காக, சூயஸ் நிறுவனம் குழாய் பதித்து வருகிறது. திருச்சி ரோடு, அவிநாசி ரோடு, உக்கடம், சத்தி ரோடு போன்ற பகுதிகளில் பணி நடக்கிறது.
குழாய் பதித்த இடத்தில் ரோடு போடாமல் தாமதிக்கிறார்கள். இப்பணியின் போது, குடிநீர், கழிவுநீர் குழாய் சேதமாகி கசிவது தொடர்கிறது. அவிநாசி ரோட்டில் பல இடங்களில் கழிவு நீர், குடிநீர் குழாய் சேதமாகிறது.
அதை சூயஸ் நிறுவனம் உடனடியாக சரி செய்வதில்லை என புகார் எழுந்துள்ளது. லட்சுமி மில்ஸ் சிக்னல் அருகே குடிநீர் குழாய் சேதமாகி 4 நாட்களாக கசிகிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பாதசாரிகள் நடக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள்.
‘குழாய் பதிக்கும்போது கழிவுநீர், குடிநீர் வழித்தடம் சேதமானால் உடனடியாக சரி செய்ய வேண்டியது சூயஸ் நிறுவனத்தின் பணி. குடிநீர் குழாய் சேதமானால் உடனே சரிசெய்துவிடலாம். கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் இருப்பதால் அவிநாசி ரோட்டில் பெரிய வடிகால்கள் இருக்கும். கழிவுநீர் வடிகால் சேதமானால் சரி செய்வதில் தாமதம் ஏற்படுகிறது’ என்கின்றனர் மாநகராட்சி அதிகாரிகள்.
