
குடியிருப்புக்கு பிளக்ஸ் போர்த்தி முதல்வர் கண்ண மறச்சுட்டாங்க!
பொள்ளாச்சி - உடுமலை ரோட்டுல நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தேன். அப்ப, முதல்வர் கண்ணுக்கு குறை எதுவும் தெரியக்கூடாதுனு திரை போட்டு மறச்ச விஷயம் தெரியுமானு, பேச ஆரம்பித்தார்.
பி.ஏ.பி., வளாகத்து, திட்டத்தோட முன்னோடிகள் சிலை திறப்பு விழாவுல, முதல்வர் ஸ்டாலின் கலந்துக்கிட்டாரு. அவரு, பொள்ளாச்சிக்கு வந்துட்டு போன பிறகு தான் பரபரப்பு ஏற்பட்டிருக்கு.
அதிகாரிங்க பம்பரமாக சுற்றினாங்க. இதுல, பி.ஏ.பி. அலுவலகம் அருகே பழமையான குடியிருப்பு கட்டடம் இருக்குது. அது முதல்வர் கண்ணுல படாம இருக்க, வெள்ளை பிளக்ஸ் கட்டி தொங்க விட்டு, முதல்வர் பார்வைக்கு தெரியாம அதிகாரிக மறைச்சுட்டாங்க. இதை பார்த்த மகாலட்சுமி நகர் குடியிருப்பு மக்கள் அதிருப்தியில இருக்காங்க.
வீட்டை இடிச்சு கட்ட அனுமதி கேட்டா இழுத்தடிக்குறாங்க. ஆனா, முதல்வர் வர்றப்ப அந்த கட்டடத்தை மறச்சுட்டாங்க. அனுமதி கொடுத்திருந்தா கட்டடத்த இடிச்சு கட்டியிருக்கலாம்னு புலம்புறாங்க.
கட்டடத்த பிளக்ஸ் போர்த்தி மறச்ச சம்பவம் இப்ப பேசு பொருளா மாறியிருக்கு. இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த அதிகாரிகளே போதும்னு, சொன்னார்.
நடிகர் துவங்கியிருக்கற கட்சியில 'மாஜி'கள் ஆதிக்கம்
இருக்குமோ! 'வால்பாறை தொகுதியில மாஜி எம்.எல்.ஏ., போட்டியிட போரறாமே' என, டீ கடைகளில் இரண்டு இளைஞர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களின் பேச்சை கவனித்தேன்.
த.வெ.க. சார்பில் வனவிலங்கு - மனித மோதலுக்கு தீர்வு காணக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தப்ப, மாஜி எம்.எல்.ஏ., ஸ்ரீதரன் கலந்துக்கிட்டாரு. நான் எம்.எல்.ஏ.வாக இருக்கும் போது வால்பாறைக்கு நிறைய செய்திருக்கேன் என, பட்டியிலிட்டு பேசினாரு.
நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த அவரை கட்சி நிர்வாகி ஒருவர் பேச்சை முடியுங்க. போலீஸ் கொடுத்த 'டைம்' முடியப்போகுதுனு அவர் காதில் கூறினார். அதுக்கப்பறம், மனித உயிர்கள் பலியாவதை தடுக்க யாரும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கலை. வரும் தேர்தலில் த.வெ.க. நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்னு சொல்லி பேச்சை முடித்தார்.
கூட்டத்தில் இருந்த கட்சி நிர்வாகிகள், இவரு, அ.தி.மு.க. ஆட்சியில வால்பாறை எம்.எல்.ஏ.,வா இருந்தாரு. இப்ப மறுபடியும் எம்.எல்.ஏ., ஆகணும்னு ஆசையில நம்ம கட்சியில சேர்ந்து, நமக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பை தட்டி பறிக்கறாருனு ஆதங்கப்பட்டாங்களாம். இந்த கட்சியிலயும் 'மாஜி' ஆதிக்கம் தான் இருக்கும் போல தெரியுதுனு, பேசிக்கிட்டாங்க.
ரயில்வே ஸ்டேஷன்ல அத்துமீறல் இப்பவே கடிவாளம் போடணும்
கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனுக்கு நண்பரை சந்திக்க சென்றிருந்தேன். நண்பர் ரயிலில் இருந்து இறங்கி வந்தார். இருவரும் 'பார்க்கிங்' ஏரியாவுக்கு பைக் எடுக்க சென்றோம்.
அப்போ நண்பர், ஆட்டோ ஓட்டுநர்கள் அத்துமீறல் பத்தி உனக்கு தெரியுமானு கேட்டுட்டு, பேச ஆரம்பித்தார்.
பேசஞ்சர் சிலர் ரயில்ல இருந்து இறங்குறப்போ, ஆட்டோ டிரைவர்கள் சிலர் பிளாட்பார்ம் டிக்கெட் கூட எடுக்காம விதிமீறி பேசஞ்சரை கூட்டிட்டு போறாங்க. சில ஆட்டோக்காரங்க 'பார்க்கிங்'ள நின்னு வர்றவங்கள கூட்டிட்டு போனாலும், ஒரு சிலர் இப்படி விதிமீறி செயல்படுறாங்க. இதனால, மொத்த ஆட்டோக்காரங்களுக்கும் பேர் கெட்டு போகுது.
இதாவது பரவாயில்ல, மத்தியான நேரத்துல கைய பிடிச்சு இழுக்காத குறையா, வாங்க என்னோட ஆட்டோவுல போலாம்னு கட்டாயப்படுத்துறாங்க.
இத ரயில்வே நிர்வாகம் கவனித்து பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்காத ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கணும். ஆட்டோக்கள வரிசையில நிறுத்தி பிரச்னை இல்லாம இயக்கணும். இதுக்கு போலீசார் நடவடிக்கை எடுக்கணும். இல்லாவிட்டால், ஆட்டோக்காரங்களுக்குள் மோதல் ஏற்படும்னு, சொன்னாரு.
ஆளும்கட்சி நிர்வாகிகள் 'அட்ராசிட்டி'
போக்குவரத்து கழகத்துல அதிருப்தி பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில், ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக நண்பரை சந்தித்தேன். அந்த காலத்த விட, இந்த காலத்துல ஆளும்கட்சி தொழிற்சங்க நிர்வாகிக அட்ராசிட்டி பண்ணுறாங்கனு சொன்னார். என்ன விஷயம்னு விசாரிச்சேன்.
அரசு போக்குவரத்து கழக, பொள்ளாச்சி பணிமனைகளில், ஆளும்கட்சியை சேர்ந்த டிரைவர்கள், கண்டக்டர்கள் சிலர் பணியில் 'கோல்மால்' செய்யறாங்க. ஒரு சில கண்டக்டர்கள், அவர்களுக்கு வழங்கப்படும் பணி நாள்ல, தற்காலிக கண்டக்டர்களை பணிக்கு செல்ல அனுமதிக்கறாங்க. இவர்கள், ஹாயாக சொந்த வேலைகள கவனிக்கறாங்க.
குறிப்பா, 10 நாட்கள் பணிக்கு வராவிட்டாலும், 3 நாட்கள் மட்டுமே விடுப்பில் இருந்தது போல வருகை பதிவேட்டில் முறைகேடு செய்யறாங்களாம். சக ஊழியர்கள் வருகை பதிவு முறைகேடுகளை ஆதாரங்களோட முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பியிருக்காங்க.
கோவை மண்டல தொ.மு.ச. நிர்வாகிகள், அதனை மறைக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்து வச்சிருக்காங்க. இதனால, மற்ற பணியாளர்கள் என்ன செய்வதுனு தெரியாம கடும் அதிருப்தியில இருக்காங்கனு சொன்னார்.
கிராம சபை கூட்டத்த கண்துடைப்புக்கு நடத்துறாங்க!
குடிமங்கலம் நால்ரோடு சந்திப்பில், பேக்கரியில் டீ குடித்த போது, அங்கிருந்த கிராம மக்கள் கிராம சபை கூட்டத்த பத்தி பேசிக்கிட்டு இருந்தாங்க. அவங்க பேசியதில் இருந்து...
குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட பெரும்பாலான ஊராட்சிகள்ல விதிமுறைகளை பின்பற்றாம, கிராம சபை கூட்டம் நடத்தியிருக்காங்க. நூறு நாள் பணியாளர்களை திரட்டி தீர்மானங்கள நிறைவேற்றியிருக்காங்க. வழக்கம் போல எந்த விவாதமும் இல்லாம வரவு செலவு அறிக்கையை தாக்கல் பண்ணிட்டாங்க.
போதிய மக்கள் பங்களிப்பு இல்லாம கிராம சபை நடப்பது குறித்து கண்காணிப்பு அலுவலர்களும் கண்டுக்கறதில்ல. கிராம அடிப்படை வசதிகள் குறித்து சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினாலும் பதில் சொல்லறதில்ல. இந்த அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க சமூக ஆர்வலர்கள் ஒருங்கிணைந்து அரசுக்கு புகார் மனு அனுப்பியிருக்காங்க.
ஏற்கனவே பல முறை இது குறித்து புகார் அனுப்பியும், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கை எடுக்கல. இந்த மனு மீதாவது ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுத்தாத்தான் பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி கிராம சபை கூட்டங்கள் நடக்கும்.
இந்த பிரச்னை குறித்து, அ.தி.மு.க. - பா.ஜ. உள்ளிட்ட கட்சிகளிடமும் மனுக்கொடுத்திருக்காங்க. அ.தி.மு.க. ஆட்சிலயும் இப்படி தான் நடந்துச்சு. அதனால, இந்த பிரச்னைய யாரும் கண்டுக்கலனு, பேசிக்கிட்டாங்க.