sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரிப்போர்ட்டர் லீக்ஸ்

/

ரிப்போர்ட்டர் லீக்ஸ்

ரிப்போர்ட்டர் லீக்ஸ்

ரிப்போர்ட்டர் லீக்ஸ்


ADDED : நவ 09, 2025 10:53 PM

Google News

ADDED : நவ 09, 2025 10:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கால்வாய் கரையெல்லாம் ஆக்கிரமிப்பு ஆளும்கட்சி 'அட்ராசிட்டி' அதிகரிப்பு பொள்ளாச்சி - கோட்டூர் ரோட்டில் நண்பருடன் 'வாக்கிங்' சென்றேன். 'ஆளும்கட்சியினர் தொல்லை அதிகரிச்சுட்டே போகுதுனு' நண்பர் பேச ஆரம்பித்தார்.அவர் கூறியதில் இருந்து...

ஆழியாறு புதிய ஆயக்கட்டு கால்வாய் பகுதியில, நாளுக்குநாள் ஆக்கிரமிப்பு பிரச்னைகள் தலைதுாக்கிட்டு இருக்கு. கால்வாயையொட்டி, ஜீப் பாதையை ஆக்கிரமிச்சு கம்பி வேலி போடுவது, கால்வாயின் ரெண்டு பக்கமும் நிலம் வைத்திருக்கற விவசாயிகள், குழாய் போட்டு தண்ணீர திருடுவது என, ஆளும்கட்சி தலையீடு அதிகரிச்சுட்டே போகுது.

அதிகாரிக, பாசன சபை தலைவர்களிடம் எந்தவொரு கருத்தும், அனுமதியும் கேட்காம ஆளும்கட்சி ஆசியோடு ஆக்கிரமிப்பு செய்யறாங்க. அங்கலகுறிச்சி, வேட்டைக்காரன்புதுார் கால்வாய்களில் ஆக்கிரமிப்பு இருக்குனு ஆதாரத்துடன் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்கறதில்ல.

அதிகாரிகளும் ஆளும்கட்சிக்காரங்கள ஒன்னும் பண்ண முடியாதுனு மவுனமா இருக்காங்க. இதனால, ஆக்கிரமிப்பு செய்யறவங்க தைரியமா அத்துமீறுறாங்க. பல பாசன சபை தலைவர்கள், பெயருக்கு மட்டும் நமக்கு பதவி எதற்கு, அதிகாரம் இல்லாவிட்டால் ராஜினாமா செய்யலாம்ங்கற மனநிலையில இருக்காங்க.

விவசாயிகள் தான் உயிர் மூச்சுனு சொல்லற முதல்வர், ஆளும்கட்சியினர் செய்யும் அட்ராசிட்டிக்கு முற்றுப்புள்ளி வச்சா தேர்தலில் ஓட்டு கிடைக்கும். இல்லைனா, ஓட்டுக்கு வேட்டாகிடும். அதனால, ஆளும்கட்சி பாசன சங்க தலைவர்கள் சிலர் இந்த பிரச்னைய முதல்வர் பார்வைக்கு கொண்டு போயிருக்காங்கனு சொன்னார்.

போதையில ரகள பண்ணுறாங்கபோலீசாரும் கண்டுக்கறதில்ல கிணத்துக்கடவு தியேட்டரில் நண்பரை சந்தித்தேன். மது போதையில் ரகளை நடப்பதாக ஆவேசமாக பேசினார். என்ன நடந்ததுனு விசாரிச்சேன்.

கிணத்துக்கடவு மயானம் பக்கத்துல இருக்கிற டாஸ்மாக் மதுக்கடையில, புல்லா சரக்கடிச்சிட்டு ரயில்வே பாலத்துக்கு கீழே இருக்கிற ரோட்டில் சிலர் நின்னுகிட்டு, போதையில ரகளை பண்ணுறாங்க. இது மட்டுமா, பைக்ல யாராவது தனியா போனா, பைக்க நிறுத்தி அவங்க கிட்ட காசு கேட்கிறதும், மிரட்டுறதும் அதிகமாயிச்சு.

போன வாரம் பைக்ல போன ரெண்டு பேரிடம், பைக்க கொடு நான் வீட்டுக்கு போகணும்னு போதையில ரகள பண்ணியிருக்காங்க. போதை ஆசாமிகள மிரட்டி விட்டதால, பைக்ல போன ரெண்டு பேரும் எந்த பாதிப்பும் இல்லாம போனாங்க. அந்த நேரத்துல பெண்கள் தனியா பைக்குல போயிருந்தா என்னாயிருக்கும். யோசிக்கவே கஷ்டமா இருக்கு.

இது மாதிரி அடிக்கடி நடக்குது, போலீசாரும் கண்டுக்கறதில்ல. பக்கத்து ஊர் மக்களும், இங்க இருக்கிற டாஸ்மாக் மதுக்கடைய வேற இடத்துக்கு மாத்தணும்னு அதிகாரிக கிட்ட மனு கொடுத்திருக்காங்க. ஆனா, இதுவரைக்கும் ஒண்ணுமே நடக்கல. ஆனா, தினமும் ரகள மட்டும் நடக்குது. இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோனு ஆதங்கப்பட்டாரு.

தேர்தல்ல சீட்டுக்கு துண்டு போடும்அ.தி.மு.க. முக்கிய புள்ளிகள்! வால்பாறையில் டீ குடித்து கொண்டிருந்த இளைஞர்கள், சட்டசபை தேர்தல் குறித்து சுவாரஸ்யமாக பேசிக்கிட்டிருந்தாங்க. அவர்கள் பேசிக்கொண்டதில் இருந்து...

வால்பாறை சட்டசபை தொகுதியில பெரும்பாலும் அ.தி.மு.க., தான் வெற்றி பெற்றிருக்கு. இத சாதகமா பயன்படுத்தி அ.தி.மு.க.வில் மாஜி எம்.எல்.ஏ., பொள்ளாச்சி, கிணத்துக்கடவு தொகுதியை சேர்ந்த கட்சியின் முக்கிய புள்ளிகள் சிலர், தேர்தலில் போட்டியிட சீட் கேட்க இப்போதே தயாராயிட்டு இருக்காங்க. இதுக்காக, கட்சியில நடக்கற எல்லா கூட்டத்திலும் தவறாம கலந்துக்கறாங்க.

குறிப்பா, மாஜி அமைச்சர் வேலுமணி கடைக்கண் பார்வைக்காக காத்திருக்காங்க. சட்டசபை தேர்தல்ல, அ.தி.மு.க.,வினர் காட்டும் ஆர்வத்தால, தி.மு.க.,வினர் கலக்கத்துல இருக்காங்க.

தி.மு.க.,வை பொறுத்தவரை கூட்டணிக்கு தான் இந்த முறையும் சீட் ஒதுக்கப்படும்னு சொல்லறாங்க. இதுனால, தி.மு.க.,வினர் 'அப்செட்' ஆகியிருக்காங்க. தி.மு.க.,வுல பல கோஷ்டியா சுத்துறாங்க.

அதனால, தேர்தல்ல எப்படியும் அ.தி.மு.க., கூட்டணிக்கு சாதகமான களமாக இருக்கும்னு அந்த கட்சிக்காரங்க கணிச்சு, சீட் வாங்க காய் நகர்த்திட்டு இருக்காங்கனு, பேசிக்கிட்டாங்க.

முகாம்ல மக்கள் மனு கொடுத்தாலும்ஆபீஸ்க்கு கூப்பிட்டு பணம் பறிக்கறாங்க மடத்துக்குளம் தாலுகா ஆபீஸ்ல இருந்து வெளியே வந்த மக்கள், 'பலமுறை அதிகாரிக அழைச்சு பேசினாலும், மனுக்களுக்கு தீர்வு மட்டும் கிடைக்க மாட்டீங்குதுனு,' புலம்பிட்டோ போனாங்க. என்னனு விசாரிச்சேன்.

மடத்துக்குளம் தாலுகாவில் பல்வேறு கிராமங்களில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடக்குதுங்க. பல்வேறு கோரிக்கைகள் குறித்து அரசு துறை அதிகாரிக மனுக்கள் வாங்கறாங்க. ஆனா, மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காம, வருவாய்த்துறை, சர்வே துறை அதிகாரிக மனு கொடுத்தவங்கள கூப்பிட்டு, இந்த ஆவணம் வேண்டும், அந்த ஆவணம் வேண்டும்னு அலைக்கழிக்கறாங்க.

முகாம்ல வாங்கின மனுக்கள் மீது வசூலும் அமோகமாக நடக்குது. மடத்துக்குளம் சாளரப்பட்டியில் வசிக்கும் மக்கள், குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா, ஏற்கனவே பட்டா பெற்றவங்க இ-பட்டா கேட்டும் மனு கொடுத்தோம்.

ஒரு வாரம் கழித்து அரசு அதிகாரிக, ஆளும்கட்சிக்காரங்க, மனு கொடுத்தவங்ககிட்ட, இ-சேவை மையத்தில், 4 செட் ஆவணங்கள் மற்றும் 500 ரூபா பணம் கொடுக்கணும்னு மிரட்டினாங்க.

கேட்கறத கொடுக்கலைனா, இலவச வீட்டு மனை பட்டாவை ரத்து செஞ்சுட்டு, வேறு நபர்களுக்கு பட்டா கொடுத்துடுவோம்னு மிரட்டினாங்க. அதிர்ச்சியடைந்து பணத்த கொடுத்தோம். ஒரு நாள் வேலைக்கும் போகாம, ஆவணங்கள எல்லாம் கொடுத்தோம். இந்த மாதிரி பல கிராம மக்கள் கிட்ட வசூல் நடந்திருக்கு. ஆனா, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கலனு ஆதங்கப்பட்டாங்க.

விளையாட்டு போட்டி நடத்தறோம்பணத்த கொடுக்க இழுத்தடிக்கறாங்க பொள்ளாச்சியில் உடற்கல்வி ஆசிரியர் நண்பரை சந்தித்தேன். மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி நடத்தினாலும், அதற்கான செலவு தொகை வழங்க இழுத்தடிக்கறாங்கனு, பிரச்னைய சொல்ல ஆரம்பித்தாரு.

பள்ளிக்கல்வித்துறை வாயிலாக குடியரசு மற்றும் பாரதியார் தின விளையாட்டு போட்டிகள் நடத்தறாங்க. இதுக்காக, குறுமைய அளவிலான போட்டி நடத்தறதுக்கு, 98 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு பண்ணியிருக்காங்க. அந்த தொகை அந்தந்த மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசம் கொடுத்திருக்காங்க.

ஆனா, இந்தத் தொகை நிதியாண்டின் கடைசியில தான் ஒப்படைக்கப்படுமாம். இதனால, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் என்ன பண்ணறதுனு தெரியாம திணறிட்டு இருக்காங்க.

இது ஒரு புறம் இருக்க, தமிழகத்துல இருக்கற அனைத்து மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்களும் முழுமையாக அந்தந்த குறுமைய போட்டி நடத்திய விபரங்களை அனுப்பினால் தான், அதற்கான தொகையை கொடுக்கப்பபடும்னு முதன்மை உடற்கல்வி ஆய்வாளருக சொல்லியிருக்காங்க.

இதனால, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் குறுமைய அளவிலான போட்டியை நடத்திய பள்ளிகளுக்கான செலவின தொகை வழங்கறதுல இழுபறி நீடிக்கிறதுனு, விபரத்த சொன்னாங்க.

தாசில்தார் மாறிட்டே இருந்தா நிர்வாகம் நடக்குமா?

உடுமலை தாலுகா அலுவலகத்தில், விவசாயிகள் ஓரங்கட்டி நின்னு சத்தமா பேசிகிட்டு இருந்தாங்க. என்னனு விசாரிச்சேன். விவசாயிக பிரச்னைக்கு தீர்வு கிடைக்க, தாலுகா ஆபீசுக்கு நடையாய் நடக்கறோம். இங்க வந்து பார்த்தா அதிகாரிங்க பிரச்னையே தீர்க்காம கிடக்குது. போன மாசம் வந்தப்ப ஒரு தாசில்தாரு இருந்தாரு. சில நாளு கழிச்சு வந்தா அவரை மாத்திட்டாங்க. புது தாசில்தாரு வருவாங்கன்னு சொன்னாங்க. சரி நாமளும் ஒரு வாரம் கழிச்சு போய் பார்ப்போன்னு இப்ப வந்தா, போன மாசம் இருந்த தாசில்தாரே மறுபடியும் வந்துட்டாராம். இப்படி வாரத்துக்கு ஒரு தாசில்தாரா மாத்தினா எப்படி வேலை நடக்கும். ஏற்கனவே, ஒரு மனுவுக்கு ஒன்பது தடவ நடந்தாலும், ஒரு வேலையும் நடக்கறதில்ல. இதுல அதிகாரிங்க டிரான்ஸ்பார்மர்ல இத்தனை குழப்பம் நடக்குது. ஒவ்வொரு தடவையும் புதுசா வர்ற தாசில்தார்கிட்ட விவசாயிக பிரச்னையை வெவரமா சொல்லி புரிய வைச்சு, அவர் நடவடிக்கை எடுக்க தயாராகறப்ப அவரை மாத்திடுறாங்க. இப்படி நிர்வாகம் ஸ்தம்பிச்சு கிடக்கறதையெல்லாம், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் கண்டுக்கறதில்ல. அதிகாரிங்க மாற்றத்துல, ஆளுங்கட்சி உள்குத்து இருந்தாலும் இருக்கும் போலிருக்கு. இவங்க அரசியலுக்கு விவசாயிக திண்டாட வேண்டியிருக்கு. இப்ப இருக்கற தாசில்தாரை வேற இடத்துக்கு மாத்தறத்துக்கு முன்னாடி, விவசாயிக பிரச்னைய தீர்த்து வைப்பாரானு பார்ப்போம் என கூறி அங்கிருந்து நகர்ந்தாங்க.








      Dinamalar
      Follow us