ADDED : ஜன 05, 2026 05:29 AM
இல்லீகலா நடக்குது 'சரக்கு' விற்பனைதடுக்க யாருக்கும் இல்ல துணிச்சல் நெகமம் பகுதியில் உள்ள பேக்கரியில் நண்பரை சந்தித்தேன். அங்கு வந்த ரெண்டு பேர், காலை நேரத்திலேயே மது பாட்டிலோடு இருந்தாங்க. காலையிலேயே கடையை திறந்துட்டாங்கனு, ஆதங்கத்தோட பேச ஆரம்பித்தார். என்னனு விசாரிச்சேன்.
நெகமத்தில் இருந்து ரங்கம்புதூர் போகற வழியில, டாஸ்மாக் மதுக்கடையுடன் பாரும் செயல்படுது. இங்க, 24 மணி நேரமும், 'சரக்கு' விற்பனை ஜோரா நடக்குது. இங்க, டாஸ்மாக் கடை திறக்காத, ராத்திரி நேரம், காலை நேரத்துல, ஒரு குவாட்டருக்கு 260 ரூபா வாங்குறாங்க. காலையில 10:00 மணிக்கு முன்னாடி 'சரக்கு' வாங்கினா சைடிஸ் எல்லாம் இலவசமா கொடுக்கறாங்க.
ஆனா, எல்லா கடையிலும் குவாட்டர் 'சரக்கு', 160 ரூபாய்க்குத்தான் விக்கிறாங்க. இங்க மட்டும் ரேட்டை உயர்த்தி விக்குறாங்க. கேட்கற 'சரக்கு' எந்த நேரத்திலும் கிடைக்குது. இங்க மட்டும், ஒரு மாசத்துக்கு குறைந்தது, 50 ஆயிரம் ரூபாய்க்கு இல்லீகலா வருமானம் பார்க்கறாங்க.
கூலி தொழிலாளிக, தேங்காய் சுமை துாக்கறவங்க, தேங்காய் போடுறவங்க தான் அவங்களோட டார்கெட். இதெல்லாம் போலீசுக்கு தெரியாத, இல்ல தெரிஞ்சும் தெரியாத மாதிரி இருக்கறாங்களானு புரியல. இல்லீகல் சரக்கு விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுத்தா நல்லா இருக்கும். ஆளும்கட்சி தலையீடு இருக்கறதால, யாரும், எதையும் கேட்க மாட்டீங்கறாங்கனு ஆதங்கப்பட்டாரு.
திருவிழா வந்துட்டா கொண்டாட்டம்காசு மேல மட்டும் குறியா இருக்காங்க மக்கள் பிரச்னைகளுக்கு எதிர்க்கட்சியும் குரல் எழுப்பாம, அமைதியா ஏன் இருக்காங்கன்னு தெரியல என, சோமவாரப்பட்டி பஸ் ஸ்டாப்பில் முதியோர்கள்பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் பேசியதில் இருந்து...
வருஷா வருஷம் நம்ம மாலகோவில் நோம்பிக்கு, ஆயிரக்கணக்கான மக்கள் வந்துட்டு போறாங்க. அவங்களுக்கு தேவையான எந்த வசதியும் இல்லை. கோவிலுக்கு முன்னாடி ராட்டிணம், கடை போடறதுக்கு ஏலம் வேற விட்டு, பல லட்ச ரூபாய் வருமானமும் வருது.
இதுல போதிய பாதுகாப்பு இல்லாத உபகரணங்களையும், விளையாட்டுகளையும், அனுமதிக்கிறாங்க. ஏலம் வந்தா, ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் சிண்டிகேட் போட்டு, ஏலத்தொகையை குறைக்கறது வழக்கமாயிருச்சு. அதிகாரிகளும் அவங்களுக்கு சப்போர்ட் பண்றாங்க. ஏலத்தையும் வெளிப்படையா அறிவிக்கறதில்ல.
இதைப்பத்தி பேசாம இருக்க, எதிர்க்கட்சிகாரங்களுக்கு வழக்கமாக ஒரு தொகை ஒதுக்குறாங்களாம். இதனால, எதிர்கட்சிய சேர்ந்த உள்ளூர் கட்சி நிர்வாகிகளும் மவுனமா இருக்காங்க. எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதியும் கண்டுக்கறதில்ல. ஆக மொத்தம் கஷ்டப்பட போறது என்னமோ மக்கள்தான்.
வருமானம் வந்தா, எல்லா கட்சியும் கூட்டணி போட்டுக்குவாங்க. வேற வழியில்லாம, துாரத்துல இருந்து வர்றவங்க எல்லாம் சிரமப்பட்டு திரும்பி போவாங்க. வருஷா, வருஷம் இந்த பிரச்னை நடந்தாலும், எந்த தீர்வும் கிடைக்கறதில்ல.
கோவில் மேம்பாட்டையும் அதிகாரிங்க கண்டுக்கறதில்ல; ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகளும் எட்டிப்பார்க்கறதில்ல. திருவிழா வந்தா மட்டும் எல்லாரும் வந்து, காசுல குறியா இருக்காங்கனு, ஆதங்கப்பட்டு பேசிக்கிட்டாங்க.
சபாஷ்... சரியான போட்டிஅ.தி.மு.க., நகர செயலாளருக்கு 'செக்' வால்பாறை நகரத்தில், அ.தி.மு.க.,வை இரு பிரிவுகளாக பிரித்து போட்டி வச்சிருக்காங்கனு, பஸ் ஸ்டாண்டில் கட்சியினர் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். கட்சிக்குள்ள என்ன நடக்குதுனு விசாரிச்சேன்.
மாஜி அமைச்சர் உத்தரவின் பேரில், வால்பாறை நகாரட்சியில் மொத்தம் உள்ள, 21 வார்டுக இரண்டாக பிரிக்கப் போறாங்க. வர்ற சட்டசபை தேர்தல்ல, எந்த டீம் அதிக ஓட்டு வாங்கி கொடுக்கறாங்களோ, அந்த டீம்மை வழிநடத்தறவங்களே நகர செயலாளராக நீடிக்க முடியும்னு, கட்சி மேலிடம் முடிவு பண்ணியிருக்கு. அதுக்கான நடவடிக்கைய கட்சி மேலிடம் துவங்கியிருக்கு.
வால்பாறையில அ.தி.மு.க., இரு கோஷ்டிகளா செயல்படும் நிலையில, வரும் சட்டசபை தேர்தலுக்கு முன்பே, நகர செயலாளர் பதவிக்கு 'செக்' வைக்கும் வகையில இரு பிரிவாக பிரிக்கும் பணியில கட்சி மேலிடம் முடிவெடுத்திருக்கு.
தேர்தலுக்கு முன், கோஷ்டி பூசலுக்கு தீர்வு காண கட்சியின் இந்த நடவடிக்கையால், அ.தி.மு.க., நிர்வாகிகள் அதிர்ந்து போயிருக்காங்க. கட்சி மேலிடத்தின் இந்த முடிவு நகர செயலாளருக்கு எதிரா இருந்தா பதவியை ராஜினாமா செய்யப்போவதாக நகர நிர்வாகி ஒருவர் 'வாட்ஸ்ஆப்' குரூப்பில் பகிரங்கமா பதிவிட்டிருக்காரு.
சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்துல இந்த மாதிரி நடவடிக்கை தொண்டர்கள உற்சாகப்படுத்தும். ஆனா, கட்சிக்குள்ள பிளவை ஏற்படுத்தும்னு, கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவிச்சிருக்காங்கனு சொன்னாங்க.
தொழில் 'பாட்னர்'களுக்கு கட்சி பதவிஅ.தி.மு.க.,வுக்கு தாவும் உடன்பிறப்புகள் உடுமலை பஸ் ஸ்டாண்டில், தி.மு.க., நண்பரை சந்தித்தேன். 'என்னங்க, தேர்தல் நேரத்துல உங்க கட்சி நிர்வாகிகள் அ.தி.மு.க.,வுக்கு தாவுறாங்கனு,' கேட்டதும், உட்கட்சி பிரச்னைய அவர் பேச துவங்கினார்.
தி.மு.க.,வுல திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரா பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி நியமிக்கப்பட்டிருக்காரு. கட்சியில சீனியர்கள் நிறைய பேரு இருக்கும் போது, அவரு ரெண்டு பதவியில இருக்கறதால, கட்சிக்குள்ள புகைச்சல் இருக்கு.
இப்ப, அவரோட தொழில் 'பாட்னர்'களுக்கு, தி.மு.க.,வுல முக்கியத்துவம் கொடுக்க துவங்கியிருக்காரு. இதனால, கட்சியினர் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டிருக்கு. இந்நிலையில, அவரோட சொந்த ஊரான மைவாடியை சேர்ந்த முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர், பி.எல்.ஓ., பொறுப்பை வகித்த கிளைக்கழக செயலாளர் தங்கராஜ் திடீரென, ஆதரவாளர்களோட அ.தி.மு.க.,வுல இணைந்திருக்காரு.
எம்.பி.,ய யாரும் எளிதில் அணுக முடியல, அவருக்கு பதவி வந்ததும் 'பவுசு' கூடிவிட்டது, வீட்டு மனை பட்டா, முதியோர் உதவி தொகை என, மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள செய்ய முடியவில்லை, என, மாற்றுக்கட்சிக்கு தாவியவர் ஆதங்கப்படுறார்.
ஆளும்கட்சி மாவட்ட பொறுப்பாளர் தனது சொந்த ஊர் நிர்வாகியையே தக்க வைச்சுக்க முடியவில்ல. எம்.பி.,யோட செயல்பாடு தேர்தல் நேரத்தில் சிக்கல ஏற்படுத்தியிருக்குனு, விவரமா சொன்னார்.

