/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரிப்போர்ட்டர் லீக்ஸ் பொள்ளாச்சி
/
ரிப்போர்ட்டர் லீக்ஸ் பொள்ளாச்சி
ADDED : ஜன 19, 2026 06:36 AM
இல்லீகல் பிசினசில் கல்லா கட்டுறாங்க கடிவாளம் போடத்தான் ஆளில்ல பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் நண்பரை சந்தித்து பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது, அவர் சொன்னதில் இருந்து...
பொள்ளாச்சி டவுன் மற்றும் சுற்றுப்பகுதியில இரவு, பகலா தங்கு தடையின்றி மது விற்பனை அமோகமாக நடக்குது. டாஸ்மாக் கடைய குறிப்பிட்ட நேரத்துல திறந்தாலும், மது பிரியர்கள் விரும்பிய போது விரும்பிய சரக்கு கேட்கறதால, 24 மணி நேரமும் எந்த தடையும் இல்லாம, 'சரக்கு' வியாபாரம் நடக்குது.
'சரக்கு' அவங்களோட சாய்ஸ்சா இருந்தால், அதுக்கு ரேட் பிக்ஸ் பண்ணுறது விற்கறவங்களோட சாய்ஸ் தான். அதனால, இல்லீகல 'சரக்கு' விற்கும் போது ரேட் தாறுமாறா இருக்குது.
இதுமட்டுமில்லாம, கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனையும் அமோகமா நடக்குது. இப்ப, இதெல்லாம் எளிதாக கிடைக்கிற பொருளா மாறிடுச்சு. இளைஞர்களோட எதிர்காலம் தான் பாழாயிட்டு இருக்கு. போலீஸ் ஸ்டேஷனுக்கே 'கவனிப்பு' இருக்கறதால, இல்லீகல் பிசினஸ்க்கு எந்த தடையும் இல்ல.
போலீசார் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்தால் தான், 'சரக்கு', கஞ்சா, புகையிலை போன்ற இல்லீகல் பிசினசை தடுக்க முடியும். இதுல, ஆளும்கட்சிக்கும் தொடர்பு இருக்கறதால, போலீசாரும் குளிர் காயறாங்க. இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோனு, புலம்பினார்.
முதல்வர் படத்தோடு 'போஸ்' கொடுத்துஅரசு விழாவில் தி.மு.க.,வினர் அலப்பற வால்பாறையில் வரவர தி.மு.க.,காரங்க சேட்டை தாங்க முடியலனு டீ கடையில் இருவர் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களது உரையாடலை கவனித்தேன்.
வால்பாறையில சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, தி.மு.க.,காரங்கள் முதல்வர் படத்துடன் வீடு மற்றும் கடைகளுக்கு காலண்டர் கொடுத்தாங்க. இது தவிர, திராவிட பொங்கல் விழா நடத்தி, மக்களுக்கு விதவிதமான வீட்டு உபயோக பொருட்களை பரிசாகவும் கொடுத்தாங்க. மதியம் சுடச்சுட பிரியாணியும் போட்டாங்க.
அ.தி.மு.க.,வினரை உசுப்பேத்தும் வகையில, தி.மு.க., காரங்க தேர்தல் வேலைகள தீவிரமா துவங்கிட்டாங்க.
சமீப காலமாக வால்பாறையில் நடக்கும் அரசு விழாக்களில் தி.மு.க., நகரச்செயலாளர் அழையா விருந்தாளியா கலந்துக்கறாரு. அதிகாரிகளும் வேறு வழியில்லாம அவரை வரவேற்று, சால்வை அணிவித்து கவுரவிக்கறாங்க.
நகரச்செயலாளர் கூட வரும் ஆதரவாளர்கள், நிகழ்ச்சியில போட்டோ எடுக்கும் போது, முதல்வர் படத்துடன் இருக்கும் காலண்டரை உயர்த்தி பிடித்தவாறு 'போஸ்' கொடுக்கறாங்க. தேர்தல் வரப்போகுது, அதனால, மக்களை கவர என்னென்னமோ பண்ணுறாங்கனு, பேசிக்கிட்டாங்க.
வருமானத்தில் குறிகட்சி பணியில் தொய்வு குடிமங்கலம் பஸ் ஸ்டாப்பில் பஸ்சுக்காக காத்திருக்கும் இருவர் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தனர். அவர்களை பேசியதை நாமும் கேட்டதிலிருந்து...
உடுமலை, குடிமங்கலம் பகுதியிலுள்ள, சில 'டாஸ்மாக்' மதுக்கடைகளில், அனுமதியில்லாமல் 'பார்'கள் செயல்பட்டு வருகிறது. இதில் முழு ஆதாயமும் சில ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு நேரடியாகச்செல்கிறதாம்.
இவ்வாறு பல வழிகளில் வருமானம்வந்தாலும், சிலர் கட்சிக்கு செலவிடுவதில் சுணக்கம் காட்டுவதாக, தலைமைக்கு தொடர் புகார்கள் பறந்துள்ளன. குறிப்பாக, சம்பந்தப்பட்ட 'பார்'கள் செயல்படும் பகுதியிலுள்ள கிளை மற்றும் இதர நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்களாம்.
வருமானத்தை மட்டும் ஆர்வத்துடன் எடுத்துக்கொள்கிறார்கள்; கட்சிக்கும் செலவிடுவதில்லை; நிர்வாகிகளையும் கண்டுகொள்வதில்லை என்ற புகாருக்கு தலைமையில் இருந்து ரியாக் ஷனும் வந்துள்ளதாம்.
அதன்படி, சொந்த பெயரிலும், பினாமிகள் பெயரிலும் பெற்ற அனுமதியை புதுப்பிக்காமல் தொடர்ந்து 'பார்' நடத்துபவர்கள், விடுமுறை நாட்களில் 'சில்லிங்' முறையில் சரக்கு விற்பனை செய்பவர்களிடம், கமிஷன் பெறுபவர்கள், அ.தி.மு.க., பிரமுகர்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள், கட்சி விழாக்களில் பெயரளவுக்கு தலையை காட்டி செல்பவர்கள் என பெரிய பட்டியல் தயாராகி வருகிறதாம்.
இத்தகைய வருவாய் பெருபவர்கள், கட்சி அறிவித்த விழாக்களுக்கு எவ்வளவு செலவிட்டார்கள் என்ற விபரங்களும் சேகரிக்கப்படுகிறதாம். இந்த பட்டியல் அடிப்படையில், தேர்தலுக்கு முன் அந்நிர்வாகிகளுக்கு முதலில் 'வார்னிங்'கும், புகார்கள் தொடர்ந்தால் பதவியில் இருந்து கல்தா கொடுக்கவும் வாய்ப்புள்ளதாக, தி.மு.க., வினரிடையே பரபரப்பு பேச்சு நிலவி வருகிறது.
பள்ளி கட்டடத்த பராமரிச்சாங்கமேற்கூரை மரங்கள் என்னாச்சு? கிணத்துக்கடவு புது பஸ் ஸ்டாண்டுக்கு நண்பரை சந்திக்க சென்றிருந்தேன். நம்ம ஸ்கூல்ல, பராமரிப்பு பணி நடந்தப்ப பிரிச்ச மரத்தை எல்லாம் என்ன பண்ணிணாங்கனு தெரியலைனு, பேச ஆரம்பித்தார். என்னன்னு விசாரிச்சேன்.
கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில, பழைய ஓட்டு கட்டடத்துல மாணவர்கள் அமர்ந்து படிக்கறது ஆபத்தா இருந்துச்சு. ஓடு உடைஞ்சு வகுப்பறையில விழுந்துச்சு. அதனால, பள்ளிக்கட்டடத்தை சீரமைக்க முடிவு பண்ணிணாங்க.
மூணு மாசத்துக்கு முன்னாடி, பழைய கட்டடத்துல இருக்கிற ஓடு, மரக்கட்டை எல்லாம் எடுத்துட்டு, அதுக்கு பதிலா புதுசா சீட் போட்டாங்க. இதனால எல்லாருமே சந்தோஷப்பட்டாங்க.
ஆனா, அந்த ஓடு, மரக்கட்டை எல்லாம் முறைப்படி ஏலம் விட்டு இருக்கணும். இப்ப வரைக்கும் ஏலம் நடந்ததா, இல்லையா, அந்த மரக்கட்டை எல்லாம் எங்கு வச்சிருக்காங்க, இல்ல வித்துட்டாங்களானு தெரியல. இப்போ வரைக்கும் புரியாத புதிராகவே இருக்கு.
பழைய கட்டடத்துல இருந்த மரக்கட்டை எல்லாம் விலை மதிப்பு மிக்கது. அந்த மரத்த என்ன பண்ணிணாங்கனு தெரியல. இத பத்தி டீச்சர்ஸ் கிட்ட கேட்டாலும், யாருமே தெரியலைனு சொல்றாங்க. ஆக மொத்தத்துல, பள்ளி பராமரிப்பு பணியில, பழைய மரத்தை எல்லாம் 'அபேஸ்' பண்ணிட்டாங்கனு, சொன்னார்.

