/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மீண்டும் வைக்கப்படும் விளம்பர பலகைகள்: ஆதரிக்கும் நகரமைப்பு பிரிவு; கேட்டால் 'சாக்கு போக்கு'
/
மீண்டும் வைக்கப்படும் விளம்பர பலகைகள்: ஆதரிக்கும் நகரமைப்பு பிரிவு; கேட்டால் 'சாக்கு போக்கு'
மீண்டும் வைக்கப்படும் விளம்பர பலகைகள்: ஆதரிக்கும் நகரமைப்பு பிரிவு; கேட்டால் 'சாக்கு போக்கு'
மீண்டும் வைக்கப்படும் விளம்பர பலகைகள்: ஆதரிக்கும் நகரமைப்பு பிரிவு; கேட்டால் 'சாக்கு போக்கு'
ADDED : அக் 04, 2024 11:40 PM
கோவை : கோவை மாநகராட்சி பகுதியில், அனுமதியற்ற விளம்பர பலகைகள் மீண்டும் வைக்கப்பட்டு வருகின்றன. அவற்றை அகற்ற துரித நடவடிக்கை எடுக்காமல், நகரமைப்பு பிரிவினர் சாக்குபோக்கு காரணம் கூறி வருகின்றனர்.
வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில், சாலைகளுக்கு மிக அருகாமையிலோ அல்லது சாலை சந்திப்புகளிலோ எவ்வித விளம்பர பலகைகளும் வைக்கக்கூடாது என உச்ச நீதிமன்றமும், உயர்நீதி மன்றமும் பலமுறை அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறது.
தமிழக அரசும் விளம்பர பலகைகள் வைப்பதற்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறது. அதிலும், சாலை சந்திப்புகள் மற்றும் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் இடங்களில், விளம்பர பலகைகள் வைக்க அனுமதி வழங்கவில்லை.
கருமத்தம்பட்டியில் விளம்பர பலகையின் இரும்பு சாரம் சரிந்து, மூன்று தொழிலாளர்கள் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அதன்பின், 'மாவட்டத்தின் எந்த பகுதியிலும் விளம்பர பலகைகள் இருக்கக் கூடாது; அனுமதியற்ற விளம்பர பலகைகள் இருந்தால், உடனடியாக அகற்ற வேண்டும்' என்றெல்லாம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தினார். உடனடியாக, அனைத்து பகுதிகளிலும் விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன.
இந்நிலையில், கோவை நகரப் பகுதியில் மீண்டும் ஆங்காங்கே விளம்பர பலகைகள் வைக்கப்படுகின்றன. தற்போது, சின்னியம்பாளையத்தில் மாநகராட்சி எல்லை பகுதியிலும், ஸ்டேட் பாங்க் ரோட்டில் எஸ்.பி., அலுவலகத்துக்கு எதிரே ஓட்டல் சுவரிலும், செல்வபுரம் ரோட்டிலும் அனுமதியற்ற விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை அகற்ற மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டார். ஆனால், சாக்குபோக்கு காரணம் கூறி, அவற்றை அகற்றாமல், நகரமைப்பு பிரிவினர் மெத்தனமாக இருக்கின்றனர்.
ஏற்கனவே விளம்பர பலகைகள் அகற்றிய இடத்திலேயே மீண்டும் வைக்கப்பட்டுள்ளன. இரும்பு கம்பிகளையும் அகற்ற, மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தியிருந்தார். அவரது அறிவுறுத்தலை அவற்றை நகரமைப்பு பிரிவினர் மதிக்கவில்லை.
அவற்றை அகற்றாததால், தற்போது மீண்டும் வைத்துள்ளனர். அனுமதியின்றி விளம்பர பலகைகள் வைப்போருக்கு, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் உடந்தையாக இருக்கிறார்களோ என்கிற சந்தேகம் ஏற்படுகிறது.
அனைத்து விளம்பர பலகைகளையும் அகற்றி, மீண்டும் வைக்காமல் இருக்க நிரந்தர நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, அதிகாரிகளின் மீதான இந்த 'கறை' நீங்கும்.