/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிதாக கட்டும் பஸ் ஸ்டாண்டில் மாற்றம் குறித்து கருத்து கேட்பு! பஸ் உரிமையாளர்கள், அதிகாரிகள் ஆலோசனை
/
புதிதாக கட்டும் பஸ் ஸ்டாண்டில் மாற்றம் குறித்து கருத்து கேட்பு! பஸ் உரிமையாளர்கள், அதிகாரிகள் ஆலோசனை
புதிதாக கட்டும் பஸ் ஸ்டாண்டில் மாற்றம் குறித்து கருத்து கேட்பு! பஸ் உரிமையாளர்கள், அதிகாரிகள் ஆலோசனை
புதிதாக கட்டும் பஸ் ஸ்டாண்டில் மாற்றம் குறித்து கருத்து கேட்பு! பஸ் உரிமையாளர்கள், அதிகாரிகள் ஆலோசனை
ADDED : ஆக 13, 2025 08:19 PM

பொள்ளாச்சி; 'பொள்ளாச்சியில் புதிதாக கட்டும் பஸ் ஸ்டாண்ட், 'ஆம்னி பஸ் ஸ்டாண்டாக' மாற்றலாம்,' என, நகராட்சியில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
பொள்ளாச்சி சி.டி.சி. மேட்டில், 3.25 ஏக்கர் பரப்பளவில், ஏழு கோடி ரூபாய் செலவில்புதிதாக பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணிகள்நடக்கின்றன.
பஸ் உரிமையாளர்கள், அரசு போக்குவரத்து கழகம், வட்டார போக்குவரத்து அதிகாரிகள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினருடன் கருத்து கேட்பு கூட்டம், நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. நகராட்சி தலைவர் சியாமளா தலைமை வகித்தார். துணை தலைவர் கவுதமன் முன்னிலை வகித்தார்.
நகராட்சி கமிஷனர் கணேசன் பேசுகையில், ''புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணிகள் நடக்கின்றன. அதில், என்னென்ன மாற்றங்கள் செய்யலாம், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல், என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கும் வகையில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. கருத்துக்களை தெரிவிக்கலாம்,'' என்றார்.
வட்டார போக்குவரத்து மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் பேசுகையில்,'புதிய பஸ் ஸ்டாண்ட்டில், பஸ்கள் வெளியே செல்ல ஒரு வழி மட்டுமே உள்ளதால், இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது. செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு முன், ஒத்திகையாக பஸ்களை இயக்கி பார்க்க வேண்டும். அதன்பின் மாற்றம் குறித்து முடிவு எடுக்கலாம்,' என்றனர்.
பஸ் உரிமையாளர்கள் பேசியதாவது: புதிய பஸ் ஸ்டாண்டில், அனைத்து பஸ்களும் நிறுத்தம் செய்வதற்கான இடவசதி இருக்க வேண்டும்.ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் அமைத்து அனைத்து பஸ்களும் அங்கு கொண்டு சென்றால் எந்த ஆட்சேபனையும் இல்லாமல் மாற்றலாம்.
ஒரு வழியாக மட்டுமே பஸ்கள் வெளியேறும் போது இடையூறு ஏற்படும். சர்வீஸ் ரோடு போன்று அமைக்க வேண்டும். மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள், பஸ் ஸ்டாண்டுக்குள் வராமல், வெளியே நின்று பயணிகளை இறக்கி விட்டு செல்ல வாய்ப்புள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசலும், பிரச்னையும் ஏற்பட வாய்ப்புள்ளது.
பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி துவங்குவதற்கு முன், கருத்து கேட்டு இருந்தால் எங்களது கருத்துக்களை தெரிவித்து இருப்போம். தற்போதுள்ள பஸ் ஸ்டாண்ட் போதுமான வசதிகள் இருக்குமா என தெரியவில்லை.
புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து நகருக்குள் வர மற்றொரு பஸ் பிடிக்க வேண்டும். இதனால், கல்லுாரி, பள்ளி மாணவர்கள், மக்களுக்கு அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். இதை தவிர்க்க மாற்று திட்டம் செயல்படுத்தலாம்.
ஆம்னி பஸ்கள், காந்தி சிலை அருகே நிறுத்தம் செய்வதால் இடையூறு ஏற்படுகின்றன. அதற்கு மாற்றாக, புதிய பஸ் ஸ்டாண்டை, 'ஆம்னி பஸ் ஸ்டாண்ட்' ஆக மாற்றலாம். இது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
அனைத்து பஸ்களும் அங்கே நிறுத்தம் செய்வது போன்று, ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும். இது குறித்து பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு, பேசினர்.
நகராட்சி கமிஷனர் பேசுகையில், ''நகர வளர்ச்சிக்கு இதுபோன்று நடவடிக்கைகள் எடுக்கப்படும். பஸ் ஸ்டாண்ட் இடமாற்றம் செய்வதால் ஆச்சிப்பட்டி பகுதி வளர்ச்சி பெறும். நகரம் விரிவடைய இதுபோன்று நடவடிக்கை தேவைப்படும். எனினும், உங்களது கருத்துக்களை அரசுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி பேசியதாவது:
தேசிய நெடுஞ்சாலை பணிகள் முடிந்து விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. அதன்பின், உடுமலை, பழநி, திண்டுக்கல்லில் இருந்து வரும் வாகனங்கள், பொள்ளாச்சிக்குள் வருவதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும்.மேற்கு புறவழிச்சாலை பணிகள் முடிந்ததும், பாலக்காடு, மீன்கரை ரோடு வழித்தடத்தில் வரும் பஸ்கள், நகருக்குள் வராது.
கூட்டு ஆய்வு செய்து, பஸ் ஸ்டாண்டில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்து அரசுக்கு கருத்துக்களை தெரிவிக்கலாம்.அதன்பின், அரசு முடிவின்படி நடவடிக்கை எடுக்கலாம்.
இவ்வாறு, பேசினார்.
நகராட்சி தலைவர் கூறுகையில், ''பஸ் ஸ்டாண்டில் கூடுதல் பணிகளை மேற்கொள்ள, அரசிடம் கூடுதல் நிதி கோரப்பட்டுள்ளது. நிதி கிடைத்ததும் பணிகள் மேற்கொள்ளப்படும். அரசிடம் இந்த கருத்துக்கள் தெரிவிக்கப்படும்,'' என்றார்.