/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உடல் நலம் குன்றிய யானை சிகிச்சை அளிக்க கோரிக்கை
/
உடல் நலம் குன்றிய யானை சிகிச்சை அளிக்க கோரிக்கை
ADDED : ஏப் 23, 2025 12:02 AM

மேட்டுப்பாளையம்,; சிறுமுகை வனப்பகுதியில் உடல் மெலிந்த நிலையில், ஆண் யானை ஒன்று சுற்றுகிறது. இதற்கு சிகிச்சை அளிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
கடந்த ஒரு வாரமாக சிறுமுகை வனப்பகுதியில், மூலையூரில் இருந்து அம்மன்புதுார் வரை, வனப்பகுதியில் ஒரு ஆண் யானை, உடல் மெலிந்த நிலையிலும், கழுத்துப் பகுதியின் கீழே தாடை வீங்கிய நிலையில் சுற்றி வருகிறது.
விவசாய நிலத்தின் அருகே இந்த யானை, பல மணி நேரம் நிற்கின்றது. இதனால் அப்பகுதி விவசாயிகள் வாழை இலை மற்றும் தண்டுகளை யானைக்கு உணவாக அளித்தும், தண்ணீரை யானை மீது பீய்ச்சி அடித்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், 'கடந்த ஒரு வாரமாக ஆண் யானை ஒன்று, உடல் நலம் இல்லாமல் இப்பகுதியில் சுற்றி வருகிறது. இந்த யானைக்கு வனத்துறையினர் மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
இதுகுறித்து சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் கூறுகையில், ''டாக்டர் குழுவின் பரிந்துரையின் பேரில், உடல் நலம் பாதித்த யானைக்கு, தர்ப்பூசணி, வாழைப்பழம் வாயிலாக, ஆன்ட்டிபயாட்டிக் மாத்திரைகள், வலி நிவாரண மாத்திரைகள், குடற்புழுநீக்கம் மாத்திரைகள் மற்றும் கல்லீரல் புத்துணர்வு வைட்டமின் டானிக் ஆகியவற்றை கொடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் யானையின் நடமாட்டத்தை வனப்பணியாளர்கள் கண்காணித்து வருகின்றனர்'' இவ்வாறு அவர் கூறினார்.