ADDED : ஆக 28, 2026 03:20 PM
கிணத்துக்கடவு: சென்றாம்பாளையம் பிரிவில் உள்ள, குட்டை அருகே தடுப்பு சுவர் அமைக்க வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிணத்துக்கடவு, சென்றாம்பாளையம் பிரிவில், 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதன் அருகாமையில் குட்டை உள்ளது. குட்டையில் நீர் தேங்கியும், புதர் சூழ்ந்தும், கழிவு நீரும் கலந்து காணப்படுகிறது.
குட்டை அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், பொது சுகாதாரம் பாதிக்கிறது. இதனால், அப்பகுதியில் உள்ள குழந்தைகள், பெரியவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, குட்டையை தூர்வாரி தடுப்பு சுவர் அமைக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.
ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சென்றாம்பாளையம் பிரிவில் உள்ள குட்டை அருகே தடுப்பு சுவர் அமைக்க, கருத்துரு தயார் செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி பெற்ற பின் தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார்.
