/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஹாகா' வரன்முறை திட்டம் எளிமைப்படுத்த கோரிக்கை
/
'ஹாகா' வரன்முறை திட்டம் எளிமைப்படுத்த கோரிக்கை
ADDED : ஆக 22, 2025 11:29 PM
பெ.நா.பாளையம்: 'ஹாகா' எனப்படும் மலையிட பாதுகாப்பு குழுமம் அங்கீகாரம் இல்லாத மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தை எளிமைப்படுத்த, அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கோவை மாவட்ட காங்., துணைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள மனுவில், தமிழகத்தில் கோவை, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட, 16 மாவட்டங்களில், 42 தாலுகாக்களில் 557 கிராமங்கள் மலையிட பாதுகாப்பு குழுமம் 'ஹாகா' எல்லைக்கு உட்பட்ட பகுதிகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.
மாவட்டங்களில், மலையோரங்களில் அமைந்துள்ள, 557 கிராமங்களில் அங்கீகாரமற்ற மனைகளை வரன் முறைப்படுத்துவதற்கான நடைமுறைகள் மிகவும் சிக்கலாக உள்ளது.
சிறிய மனை உரிமையாளர்கள், 2 சென்ட், 3 சென்ட் இடம் வைத்துள்ள ஏழை, எளிய மக்கள் தங்கள் அங்கீகாரம் இல்லாத மனைகளை வரன் முறைபடுத்த வனத்துறை, விவசாயத்துறை, கனிமவளத்துறை, வருவாய் துறை ஆகிய நான்கு அரசு துறையில் இருந்து தடையின்மை சான்று பெற்று வரைமுறைப்படுத்துவது என்பது அதிக கால தாமதம் மற்றும் பொருட்செலவு ஏற் படுகிறது.
ஏழை, எளிய குடும்பங்கள் பயன்பெற இந்த திட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும். மேலும், இது அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் வருவதற்கு வழி வகையாக இருக்கும்.
நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள இந்த பிரச்னையை தீர்க்க, எளிதில் வரன்முறை படுத்தும் வகையில் அரசாணை வெளியிட வேண்டும் என, அதில் குறிப்பிட்டுள்ளார்.