கோர்ட் உத்தரவுப்படி விதிமீறல் கட்டடங்கள் மீதான... ஆய்வு முடக்கம்!அளவீடு பணிகளை வெளிப்படையாக நடத்த மனு
கோர்ட் உத்தரவுப்படி விதிமீறல் கட்டடங்கள் மீதான... ஆய்வு முடக்கம்!அளவீடு பணிகளை வெளிப்படையாக நடத்த மனு
UPDATED : ஜூன் 16, 2026 06:34 PM
ADDED : ஜூன் 16, 2026 06:33 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சியில், கோர்ட் உத்தரவுப்படி விதிமீறல் கட்டடங்கள் குறித்து நிபுணர் குழு அளவீடு பணிகளை மேற்கொள்ள வந்தனர். அப்போது, கட்டட உரிமையாளர்கள், பணிகள் வெளிப்படையாக நடைபெற வேண்டும் என, மனு கொடுத்ததால், ஆய்வு செய்யாமல் அதிகாரிகள் திரும்பினர்.
பொள்ளாச்சி மகாலிங்கபுரம், கடைவீதி, நியூஸ்கீம் ரோடு, உடுமலை ரோடு, கோவை ரோடு என, நகரப்பகுதி முழுவதும், பெரும்பாலான வணிக கட்டடங்கள், தனியார் மருத்துவமனைகளில் விதிமீறல்கள் ஏராளாக உள்ளன. குறிப்பாக, தீயணைப்பு துறை, வருவாய் துறை, உள்ளூர் திட்டக்குழும், நகராட்சி நிர்வாகத்தின் விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன.
இந்நிலையில், அனுமதியற்ற கட்டடங்கள், அனுமதி பெற்ற கட்டடங்களில் விதிமீறல்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில், நிபுணர் குழு அமைத்து அளவீடு பணிகள் மேற்கொள்ள கோர்ட் உத்தரவிட்டது.
நகர் ஊரமைப்பு இணை இயக்குனர் புருேஷாத்தமன், நகராட்சி கமிஷனர் குமரன் மற்றும் வருவாய்துறையினர் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் அடங்கிய நிபுணர் குழுவினர், நியூஸ்கீம் ரோட்டில் நேற்று ஆய்வு மேற்கொள்ள வந்தனர். அப்போது கட்டட உரிமையாளர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:
பொள்ளாச்சி நகரில், 3,100 கட்டங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களிடம் கட்டடங்களை ஆய்வு செய்ய அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாக தெரிகிறது. நோட்டீஸ் வழங்கப்பட்ட அனைத்து கட்டடங்களின் முகவரி விபரங்களையும், பொதுமக்கள் பார்வைக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
ஒவ்வொரு கட்டடத்துக்கும் அளவீடு மற்றும் ஆய்வு மேற்கொண்ட பின், அதற்கான அளவீட்டு விபரங்கள் மற்றும் ஆய்வு அறிக்கையின் நகலை சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டும். ஆய்வு மற்றும் அளவீட்டு பணிகள் குறிப்பிட்ட சில கட்டடங்களுக்கு மட்டுமின்றி நோட்டீஸ் வழங்கப்பட்ட அனைத்து கட்டடங்களிலும் மேற்கொள்ள வேண்டும்.
ஆய்வுப்பணிகளை வார்டு வாரியாகவும், கதவு எண் வரிசைப்படியும் முதல் எண்ணிலிருந்து துவங்கி, தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும். ஆய்வு செய்யும் போது, எந்த கட்டடமும் தவறவிடப்படாமல் அனைத்து கட்டடங்களையும் பாரபட்சமின்றி ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
நிபுணர் குழுவில், பொதுமக்கள் சார்பில், மூன்று பிரதிநிதிகளை இணைக்க வேண்டும் என ஏற்கனவே கோரிக்கை மனு வழங்கப்பட்டது. ஆய்வுப்பணிகளில் வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை, பொதுமக்களின் நலனை உறுதி செய்யும் வகையில், பொதுமக்கள் சார்பில் மூன்று பிரதிநிதிகளை நிபுணர் குழுவில் இணைக்க வேண்டும். அதன்பின் ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் கூறுகையில், 'கோர்ட் உத்தரவின் வழிகாட்டுதல்படி நிபுணர் குழு அமைக்கப்பட்டு, அளவீடு மேற்கொள்ளப்படுகிறது. ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவிப்பின்படி, கட்டடத்தை அளவீடு செய்ய வரும் போது, உரிமையாளர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். இதனால், ஆய்வு பணி நடக்கவில்லை. கட்டட உரிமையாளர்களின் கோரிக்கை மனுவை, நிபுணர் குழு பரிசீலனை செய்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும்,' என்றனர்.
