ADDED : செப் 08, 2026 07:22 PM
மேட்டுப்பாளையம்: காரமடை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 8.50 லட்சம் ரூபாய்க்கு பாக்கு, ஏலம் போனது. கடந்த வாரத்தை விட, இந்த வாரம் கிலோவுக்கு 20 ரூபாய் விலை உயர்ந்தது.
காரமடை சிறுமுகை சாலையில், சாஸ்திரி நகரில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறைக்கு உட்பட்ட, ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் உள்ளது. இங்கு ஒவ்வொரு செவ்வாய் கிழமை பாக்கு ஏலம் நடைபெறுகிறது. இந்த வாரம் நடந்த ஏலத்திற்கு, 50 குவிண்டால் பாக்கு மூட்டைகளை, விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஆறு வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர்.
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த பாக்கு ஏலத்தில், ஒரு கிலோ வரப்பாக்கு குறைந்தபட்ச விலை, 190 ரூபாய்க்கும், அதிகபட்ச விலை, 221 ரூபாய்க்கு ஏலம் போனது.
பழப்பாக்கு குறைந்த பட்சம், 58க்கும், அதிகபட்சம், 67 ரூபாய்க்கும் ஏலம் போனது. ஒரு கிலோ உரித்த ராசி ரகம் பாக்கு, குறைந்த விலை, 360 ரூபாய்க்கும், அதிக விலை, 440 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தமாக, 8.50 லட்சம் ரூபாய்க்கு பாக்கு விற்பனை ஆனது.
கடந்த வாரத்தை விட, இந்த வாரம், வரப்பாக்கும், உரித்த ராசி பாக்கும் கிலோவுக்கு, 20 ரூபாய் விலை உயர்ந்து விற்பனை ஆனது. இது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஏலம் முடிந்தவுடன், விவசாயிகள் வங்கி கணக்கிற்கு, பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது. ஏலம் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள, 9659242424 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளும்படி, ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் யுவராஜ் தெரிவித்தார்.
