/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செல்வபுரத்தில் தொற்று நோய் ஏற்படும் அபாயம்
/
செல்வபுரத்தில் தொற்று நோய் ஏற்படும் அபாயம்
ADDED : ஏப் 14, 2025 11:15 PM

மூடப்படாத குழிகள்
இடையர்பாளையம், 93வது வார்டு, மதுரை வீரன் கோவில் வீதியில், குடிநீர் குழாய் பதிப்பிற்காக தோண்டப்பட்ட குழிகள், சரிவர மூடப்படாமல் உள்ளன. வெறும் மண்ணாக, குழியாக காணப்படும் சாலையில், விபத்துகள் நடக்கின்றன. மண் சாலையில் மழைநீர் தேங்கும் போது சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது.
- செந்தில்குமார், இடையர்பாளையம்.
எரிக்கப்படும் குப்பை
ஜி.என்.மில்ஸ், பொன்விழா நகர், ரயில்வே பாதைக்கு அருகிலுள்ள பகுதியில் சிலர் தொடர்ந்து குப்பையை வீசிச்செல்கின்றனர். அடிக்கடி குப்பையை தீ வைத்து எரிப்பதால், கரும்புகை பரவிவருகிறது. ரயில்பாதைக்கு அருகில், ஆபத்தான வகையில் தீ வைத்து எரிப்பதை தடுக்க வேண்டும்.
- ராமமூர்த்தி, ஜி.என். மில்ஸ்.
சாக்கடை அடைப்பு
ராமநாதபுரம், சவுரிபாளையம் பிரிவில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. சாக்கடை கால்வாயின் சுற்றுச்சுவர் இடிந்த நிலையில் உள்ளது. பிளாஸ்டிக் குப்பை நிரம்பியிருப்பதால், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் ஏற்படுகிறது.
- சக்தி, ராமநாதபுரம்.
குளத்தை மூடிய ஆகாயத்தாமரை
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்கள் மேம்படுத்தப்பட்டாலும், போதிய பராமரிப்பு இல்லை. வாலாங்குளம் முழுவதும் ஆகாயத்தாமரை படர்ந்து காணப்படுகிறது. நீர்நிலை பாதிக்கப்படும் என்பதால். ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும்.
- ரோகினி, குனியமுத்துார்.
வெள்ளியங்கிரியில் குப்பை
வெள்ளியங்கிரி மலையில், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளால், பிளாஸ்டிக் குப்பை அதிகரித்து வருகிறது. இது, சுற்றுச்சூழலுக்கு மிகவும் கேடாக உள்ளது. இதைக்கட்டுப்படுத்த வனத்துறையினர் மற்றும் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை வேண்டும்.
- பாலா, வெள்ளியங்கிரி.
பாலச்சாலையில் விரிசல்
போத்தனுார் ரயில்வே மேம்பால சாலையில், விரிசல்கள் காணப்படுகின்றன. சாலையில் பெரிய, பெரிய விரிசல்கள் இருப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். பெரும் விபத்துகள் நடக்கும் முன், சாலையை விரைவில் சீர்செய்ய வேண்டும்.
- பாலன், போத்தனுார்.
சேற்றில் மாட்டும் வாகனங்கள்
வெள்ளலுார், தேனீஸ்வர் நகர் பகுதியில், தார் சாலை அமைக்க வலியுறுத்தியும் நடவடிக்கையில்லை. மண் ரோட்டில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக இருக்கிறது. வாகனங்களின் சக்கரங்கள் அடிக்கடி சேற்றில் மாட்டிக்கொள்கின்றன.
- பாலசுப்பிரமணியன், வெள்ளலுார்.
இடையூறாகும் மரம்
திருச்சி ரோடு, ராமநாதபுரம், எல்.ஜி.பி., காலனியில் கம்பத்தின் மேலே மரம் விழுந்துள்ளது. சாலையோரம் விழுந்துள்ள மரத்தை, ஒரு வாரமாக அகற்றச் சொல்லியும் நடவடிக்கையில்லை. வாகனஓட்டிகளுக்கு சிரமமாக இருப்பதால், மரத்தை அகற்ற வேண்டும்.
- செந்தில்குமார், ராமநாதபுரம்.
கொசுப்புழு உற்பத்தி ஜோர்
கோணவாய்க்கால்பாளையம் மெயின் ரோடு, 85வது வார்டில், புதிய சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதில், கொசுப்புழுக்கள் உற்பத்தி அதிகம் உள்ளது. நோய் பரவும் அபாயம் உள்ளது. சீரான இடைவெளியில் சாக்கடையை துார்வார வேண்டும்.
- முத்துக்குமார், 85வது வார்டு.
நாய்களால் தொல்லை
செல்வபுரம் - பேரூர் மெயின் ரோட்டில் இருந்து, மார்ட்டின் அபார்ட்மென்ட் செல்லும் பாதையில், 20க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றி வருகின்றன. சாலையில் நடந்து செல்லும் குழந்தைகளை துரத்தி அச்சுறுத்துகின்றன. சைக்கிள், பைக்கில் செல்வோரை நாய்கள் துரத்துகின்றன.
- ஜெயபால், செல்வபுரம்.
தெருவிளக்கு பழுது
கோவை மாநகராட்சி, 38வது வார்டு, பொம்மணாம்பாளையம் பிரிவிலிருந்து, லட்சுமி நகர் ஆர்ச் வரை உள்ள மின்கம்பங்களில், தெருவிளக்குகள் சரிவர எரிவது இல்லை. கடந்த ஒரு வாரமாக தெருவிளக்குகள் எரியாததால், வாகனஓட்டிகள், பாதசாரிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
- சண்முகம், பொம்மணாம்பாளையம்.
தொற்றுநோய் அபாயம்
செல்வபுரம், என்.எஸ்.கே.வீதியில், சாக்கடை கால்வாயில் கழிவுநீர் நிரம்பி நிற்கிறது. சுத்தம் செய்த கழிவு சாலையிலேயே போடப்பட்டுள்ளது. சாலையின் இருபுறமும் குப்பையாக உள்ளது. சுகாதாரமற்ற சூழல் நிலவுவதால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
- சங்கர்,
செல்வபுரம்.