/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மண் தரையாக மாறிய ரோடு; விபத்துகள் ஏற்படும் அபாயம்
/
மண் தரையாக மாறிய ரோடு; விபத்துகள் ஏற்படும் அபாயம்
ADDED : மார் 24, 2025 11:02 PM

விரைந்து முடிங்க
உடுமலை - தாராபுரம் ரோட்டில், நான்கு வழி சாலை அமைக்கும் பணி மெதுவாக நடக்கிறது. இதனால், வாகன ஓட்டுநர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, நெடுஞ்சாலைத்துறையினர் இப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கார்த்திக், உடுமலை.
குப்பைக்கு தீ வைப்பு
உடுமலை, அன்சாரி வீதியில் குப்பைக்கழிவுகளை ரோட்டோரத்தில் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் அதிகம் புகை பரவுகிறது. மேலும் குப்பைக்கழிவுகளிலிருந்து வரும் துர்நாற்றத்தால் அவ்வழியாக மக்கள் செல்வதற்கும் முகம் சுழிக்கின்றனர். குப்பைக்கழிவுகளிலிருந்து தீப்பொறி பறப்பதால் வாகன ஓட்டுநர்களும் அச்சப்படுகின்றனர்.
- ராஜேந்திரன், உடுமலை.
அடையாளம் வேண்டும்
உடுமலை, காந்திநகர் பகுதியில் வேகத்தடைகள் அடையாளம் இல்லாமல் உள்ளது. இரவு நேரங்களில் அதிக வேகமாக வரும் வாகன ஓட்டுநர்கள் வேகத்தடையில் கட்டுப்படுத்த முடியாமல் அருகிலுள்ள பொதுமக்களின் மீது வாகனத்தை விடுகின்றனர். இதனால் அடிக்கடி அப்பகுதியில் விபத்துகளும் நடக்கிறது.
- செல்வி, உடுமலை.
தேங்கும் கழிவு நீர்
சூளேஸ்வரன்பட்டி, மாருதி நகர் பகுதியில் கழிவு நீர் கால்வாயில் நீர் செல்ல முடியாத படி, கால்வாயை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனால் கழிவு நீர் தேங்கி நிற்பதுடன், கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதை அதிகாரிகள் கவனித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- செல்வராஜ், பொள்ளாச்சி.
கால்வாயை மூடணும்!
வால்பாறை மார்க்கெட் பகுதியில் கால்வாய் மூடப்படாமல் இருப்பதால், பொதுமக்கள் நடந்து செல்லும் போது, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதை நகராட்சி நிர்வாகத்தினர் கவனித்து உடனடியாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
-- சிவா, வால்பாறை.
வாகனங்கள் ஆக்கிரமிப்பு
உடுமலை, பழநிரோட்டில், புதிதாக அமைக்கப்பட்டு வரும் பஸ் ஸ்டாண்ட் முன்புறம் வாகனங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு நிறுத்தப்படுகின்றன. இதனால் பழநிரோட்டை நோக்கி செல்லும் வாகன ஓட்டுநர்கள், இரவு நேரங்களில் மற்ற வாகனங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி செல்வதற்கும் வழியில்லாமல் உள்ளது.
- ரவிக்குமார், உடுமலை.
மரக்கிளையை அகற்றுங்க!
பொள்ளாச்சி --- கோவை ரோட்டில், வடக்கிபாளையம் பிரிவு அருகே ரோட்டின் ஓரத்தில் உள்ள மரக்கிளைகள் வளர்ந்து, ரோட்டை ஆக்கிரமிக்கும் படி உள்ளது. இதனால், இரவு நேரத்தில் வாகனத்தில் செல்பவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. நெடுஞ்சாலை துறை சார்பில் மரக்கிளையை வெட்டி அகற்ற வேண்டும்.
- ஆறுமுகம், பொள்ளாச்சி.
குப்பையான மின்கம்பம்
நெகமம், செட்டியக்காபாளையம் ரோட்டில் நீரோடை அருகே மின் கம்பம், குப்பை போல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மின் கம்பத்தில் உள்ள இரும்பு கம்பிகளை திருடி சென்றாலும் தெரியாத நிலை உள்ளது. எனவே, மின் துறை அதிகாரிகள் இதை கவனித்து, கம்பத்தை எடுத்துச் செல்ல வேண்டும்.
-- தங்கராஜ், நெகமம்.
பள்ளி அருகே குப்பை
கிணத்துக்கடவு அரசு பள்ளி அருகே, மக்கள் செல்லும் நடைபாதையில், அதிகளவு குப்பை கொட்டப்பட்டுள்ளது. மற்றும் இதன் அருகே உள்ள குழாயில் நீர் கசிந்து, நடைபாதையில் வழிந்து ஓடுவதால் அவ்வழியில் செல்ல மக்கள் சிரமப்படுகின்றனர். இதை பேரூராட்சி நிர்வாகம் கவனித்து, உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும்.
- சங்கர், கிணத்துக்கடவு.
ரோட்டை சீரமையுங்க
உடுமலை, யு.கே.பி.என். நகரில் ரோடு பாதி வரை அரித்து மண் தரையாக உள்ளது. இரவு நேரங்களில் வாகன ஓட்டுநர்கள், அப்பகுதியில் திரும்பும்போது அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களும் அந்த வழிதடத்தை பயன்படுத்த முடியாமல் உள்ளது.
- சந்திரசேகர், உடுமலை.