/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மயக்க ஊசி செலுத்தியும் சிக்கவில்லை; வனத்துறையினருக்கு 'டப்' கொடுக்குது 'ரோலெக்ஸ்'
/
மயக்க ஊசி செலுத்தியும் சிக்கவில்லை; வனத்துறையினருக்கு 'டப்' கொடுக்குது 'ரோலெக்ஸ்'
மயக்க ஊசி செலுத்தியும் சிக்கவில்லை; வனத்துறையினருக்கு 'டப்' கொடுக்குது 'ரோலெக்ஸ்'
மயக்க ஊசி செலுத்தியும் சிக்கவில்லை; வனத்துறையினருக்கு 'டப்' கொடுக்குது 'ரோலெக்ஸ்'
ADDED : செப் 17, 2025 11:35 PM

தொண்டாமுத்துார்; தாளியூர், யானைமடவு பகுதியில், நள்ளிரவில், மயக்க ஊசி செலுத்தி, ரோலெக்ஸ் என பெயரிடப்பட்ட யானையை பிடிக்க, வனத்துறையினர் முயன்றனர். வனப்பகுதிக்குள் சென்று விட்டதால், அத்திட்டம் தோல்வியடைந்தது.
கோவை மற்றும் போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள விளைநிலங்கள், வீடுகளை 'ரோலெக்ஸ்' என பெயரிடப்பட்ட காட்டு யானை, தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது.
இதை பிடிக்க, 5ம் தேதி முதல், தாளியூர், யானைமடவு பகுதியில், டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து வரவழைக்கப்பட்ட நரசிம்மன், முத்து, கபில்தேவ் ஆகிய மூன்று கும்கி யானைகளுடன், வனத்துறையினர் முகாமிட்டுள்ளனர்.
ரோலெக்ஸ் அடர் வனப்பகுதிக்குள் இருந்ததால், பிடிக்க முடியவில்லை. சமவெளிப்பகுதியில் இருந்தால் மட்டுமே பிடிக்க முடியும் என்பதால், வனத்துறையினர் காத்திருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு, கெம்பனுார் பகுதிக்குள் யானை வந்தது. இரவு 11 மணிக்கு வனத்துறையினர், மயக்க மருந்து செலுத்த ரோலெக்சை துரத்தினர். தாளியூர், யானைமடவு வன எல்லைப்பகுதி அருகே சென்றதும், வனத்துறையினர், துப்பாக்கி உதவியுடன் மயக்க ஊசி செலுத்தினர்.
ஆனால், யானை திடீரென அருகிலிருந்த வனப்பகுதிக்குள் சென்றது. இரவு நேரம் என்பதால், யானையை பின்தொடர முடியவில்லை.
அதன்பின், ட்ரோன் கேமராவில் தெர்மல் வீடியோவில் பார்த்தபோது, ரோலெக்ஸ், ஒரு யானை கூட்டத்துடன் இருப்பது தெரியவந்தது.
நேற்று அதிகாலை, மீண்டும் வேறு வழியாக, வனப்பகுதியை விட்டு வெளியே வந்த ரோலெக்ஸ், கெம்பனுார் பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து, சேதங்களை ஏற்படுத்தி விட்டு, அட்டுக்கல் வனப்பகுதிக்குள் சென்றது. 30க்கும் மேற்பட்ட வனத்துறையினர், ரோலெக்ஸ் யானையை கண்காணித்து வந்தனர். ஆனால், மாலை வரை, வனப்பகுதியை விட்டு, வெளியே வரவில்லை.
வனத்துறையினர் கூறுகையில், 'மயக்க ஊசி செலுத்திய போது, எதிர்பாராதவிதமாக அடர் வனப்பகுதிக்குள் சென்றது. இரவு நேரம் என்பதால், ட்ரோன் வாயிலாக கண்காணித்தோம். மயக்க மருந்து வீரியம், 3 மணி நேரத்துக்கும் குறைவாகவே இருக்கும். தற்போது, யானை நல்ல நிலையில் உள்ளது; தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்' என்றனர்.