தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தென்னையில் வேர் வாடல் பாதிப்பு அதிகரிப்பு! கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு அறிவுரை

 தென்னையில் வேர் வாடல் பாதிப்பு அதிகரிப்பு! கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு அறிவுரை

 தென்னையில் வேர் வாடல் பாதிப்பு அதிகரிப்பு! கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு அறிவுரை


ADDED : ஜூன் 11, 2026 06:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 11, 2026 06:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுப் பகுதியில் தென்னை மரங்களில் கேரள வேர் வாடல் நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், அதை கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கோவை தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பாலசுப்ரமணியம் அறிக்கை:

தென்னை மரங்களில் கேரள வேர் வாடல் நோய் பாதிப்பு அதிகம் உள்ளது. இளம் மரங்களில் பாதிப்பு ஏற்பட்டால் பூக்கும் தருணம் தள்ளிப்போவதோடு, இலை அழுகலால் பாதித்து காய்ப்பு திறன் குறையும். ஆரம்பத்தில், 35 சதவீதமும், முற்றிய நிலையில், 85 சதவீத மகசூல் இழப்பும் ஏற்படும்.

நோயின் அறிகுறிகள் ஆரம்ப நிலையில் கண்டறிவது மிகவும் கடினமாகும். எவ்வித காரணமுமின்றி அதிக குரும்பல் உதிர்தல், இலைகள் மஞ்சள் நிறமாக மாறி இலை மடல்களின் ஓரங்கள் கருகி கீழ்நோக்கி வளைந்து காணப்படும். இந்த, இரு அறிகுறிகளும் நோய் முற்றிய நிலையில் உள்ள மரங்களில் அதிகமாக காணப்படும்.

இந்நோயானது இளங்குருத்து பகுதியை தாக்கி அழுக செய்யும். பாதிக்கப்பட்ட இலைகளில் வெறும் குச்சிகள் மட்டும் காணப்படும்.

நோய் மேலாண்மை கேன்டேட்ஸ் பைட்டோபிளாஸ்மா என்னும் நுண்ணுயிரி வாயிலாக நோய்உண்டாகிறது. கண்ணாடி இறக்கை, தத்துப்பூச்சி போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகள் வாயிலாக பரவுகிறது. இந்நோய் பிற மரங்களுக்கு பரவுதலை தவிர்க்க ஆண்டுக்கு, 10 காய்களுக்கும் குறைவாக அல்லது காய்கள் இல்லாமல் இருக்கும் நோயுற்ற மரங்களை வெட்டி அகற்ற வேண்டும்.

பசுந்தாள் உரங்களான தக்கைப்பூண்டு, சணப்பை, கலப்பகோணியம் மற்றும் பியூரோரியா ஆகியவற்றை வட்டபாத்தி அல்லது தோப்பு முழுவதும் வளர்த்து பூக்கும் தருணத்தில் மடக்கி உழவு செய்ய வேண்டும்.

உர மேலாண்மை தொழு உரம் - 50 கிலோ, வேப்பம் புண்ணாக்கு - 5 கிலோ, யூரியா - 1.3 கிலோ, சூப்பர் பாஸ்பேட் - 2 கிலோ, பொட்டாஷ் - 3.5 கிலோ, டிரைக்கோடெர்மா விரிடி, பேசில்லஸ் சப்டிலிஸ் - 200 கிராம், வேர் உட்பூசணம் - 50 கிராம் ஆகியவை ஆண்டுக்கு இருமுறை பிரித்து ஒரு மரத்துக்கு இடவேண்டும்.

வேளாண் பல்கலையின் தென்னை டானிக், 40 மில்லியை, 160 மில்லி தண்ணீருடன் கலந்து ஆண்டுக்கு இருமுறை வேரில் கட்ட வேண்டும். டைமீதோயேட், 1.5 மி.லி., மருந்தை, ஒரு மி.லி.,ஒட்டுத்திரவம் கலந்து ஒரு மாத இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.

வேளாண் பல்கலையின் கோகோகான் தாய் நுண்ணுயிரி கலவையிலிருந்து பெருக்கம் செய்யப்பட்ட நுண்ணுயிரி கலவை, 2 லிட்டர் எடுத்து, 8 லிட்டர் தண்ணீருடன் கலந்து வேர்ப்பகுதியில் நன்கு நனையும்படி ஊற்ற வேண்டும். இரு மாத இடைவெளியில் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.

நுண்ணுயிரி பெருக்கம் இலை அழுகலை கட்டுப்படுத்த ஒரு மரத்துக்கு ெஹக்சகோனசோல், 2மில்லி, ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் குருத்துப்பகுதியில், 45 நாள் இடைவெளியில் ஊற்ற வேண்டும். கோகோகான் நுண்ணுயிரி பெருக்குதலுக்கு, 150 லிட்டர் தண்ணீரில், 10 கிலோ கரும்பு சக்கரை, 5லிட்டர் தயிர், சோடியம் குளோரைடு உப்பு 500 கிராம் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். அதன்பின், 5 லிட்டர் கோகோகான் தாய் கலவையை சேர்த்து, 10 நிமிடம் நன்கு கலக்க வேண்டும். நிழல் பாங்கான இடத்தில் மூடி வைக்க வேண்டும். ஐந்து முதல் ஏழு நாட்கள் தொடர்ந்து மூன்று வேளையும், 10 நிமிடம் மூங்கில்குச்சியால் கலக்க வேண்டும்.

இவ்வாறு இனப்பெருக்கமான கலவை, 2 லிட்டரை, 8 லிட்டர் தண்ணீருடன் கலந்து வேர்பகுதி நன்கு நனையுமாறு ஊற்ற வேண்டும். இம்முறை இரண்டு மாத இடைவெளியில் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். இந்த நடைமுறைகளை முறையாக பின்பற்றுவதன் வாயிலாக நோய் தாக்கத்தை கட்டுப்படுத்தி மகசூலை பெருக்க முடியும்.

இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us