/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நெரிசல் தவிர்க்க ரோட்டோர கடைகள் அகற்றம்! களம் இறங்கிய நெடுஞ்சாலைத்துறை
/
நெரிசல் தவிர்க்க ரோட்டோர கடைகள் அகற்றம்! களம் இறங்கிய நெடுஞ்சாலைத்துறை
நெரிசல் தவிர்க்க ரோட்டோர கடைகள் அகற்றம்! களம் இறங்கிய நெடுஞ்சாலைத்துறை
நெரிசல் தவிர்க்க ரோட்டோர கடைகள் அகற்றம்! களம் இறங்கிய நெடுஞ்சாலைத்துறை
ADDED : அக் 23, 2024 12:10 AM

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் ரோட்டை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட தற்காலிக கடைகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றினர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், ரோட்டோரத்தை ஆக்கிரமித்து தற்காலிக கடைகள் அமைக்கப்படுகின்றன. சமீபத்தில் இந்த கடைகளை அகற்றியதுடன், மீண்டும் அமைக்க கூடாது என, நெடுஞ்சாலைத்துறை வாயிலாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், சாலையோர வியாபாரிகளுக்கான கூட்டம் நடத்தப்பட்டு, நகராட்சி வாயிலாக குழு அமைத்து இடம் தேர்வு செய்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகை நெருங்குவதால், உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து வருவோர், ரோட்டோரங்களை ஆக்கிரமித்து கடைகளை அமைக்க துவங்கினர். வெங்கட்ரமணன் வீதி ரோடு சந்திப்பு, தபால் அலுவலக ரோடு, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட நெடுஞ்சாலைத்துறை ரோடுகளில் தற்காலிக கடைகளின் எண்ணிக்கை அதிகரித்தது.
இதுகுறித்து புகார்கள் வந்ததையடுத்து, பொள்ளாச்சி கோட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கடை அமைத்தவர்கள் தாங்களாகவே முன்வந்து கடைகளை அகற்றிக்கொண்டனர். அவர்களிடம், மீண்டும் கடைகள் அமைக்க கூடாது என அதிகாரிகள் எச்சரித்தனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தீபாவளி பண்டிகையையொட்டி சாலையோரங்களில் தற்காலிக கடைகள் அதிகளவு அமைக்கப்பட்டன. போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசல் தவிர்க்க, தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
தீபாவளி பண்டிகை நெருங்குவதால், புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்க அதிகளவு வரும் மக்கள், தபால் அலுவலக ரோடு வழியாக செல்வர். எனவே, இந்த ரோட்டில் ஆக்கிரமித்து கடைகளை அமைக்க கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பஸ் ஸ்டாண்ட், ஒன்றிய அலுவலகம் வரை ரோட்டை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.