/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜி.வி.ரெசிடென்சி பாலம் அருகே விபத்து தவிர்க்க ரவுண்டானா சாலைத்தீவு திடல்கள் அவசியம்
/
ஜி.வி.ரெசிடென்சி பாலம் அருகே விபத்து தவிர்க்க ரவுண்டானா சாலைத்தீவு திடல்கள் அவசியம்
ஜி.வி.ரெசிடென்சி பாலம் அருகே விபத்து தவிர்க்க ரவுண்டானா சாலைத்தீவு திடல்கள் அவசியம்
ஜி.வி.ரெசிடென்சி பாலம் அருகே விபத்து தவிர்க்க ரவுண்டானா சாலைத்தீவு திடல்கள் அவசியம்
ADDED : நவ 24, 2025 05:33 AM

கோவை: கோவை அவிநாசி ரோட்டில் இருந்து திருச்சி ரோடு செல்வதற்கு பன்மால் அருகே உள்ள ஜி.வி.ரெசிடென்சி ரோடு மிக முக்கியமானது. பெர்க்ஸ் ரோடு, சவுரிபாளையம் ரோடு, பன்மால் ரோடு, ஜி.வி.ரெசிடென்சி, வரதராஜபுரம் ஆகிய ஐந்து ரோடுகளில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் ஜி.வி.ரெசிடென்சி பாலம் அருகே இணைகின்றனர்.
பெர்க்ஸ் பள்ளிக்கு குழந்தைகளை விடுவதற்கும், அழைத்துச் செல்வதற்கும் நுாற்றுக்கணக்கான பெற்றோர் வாகனங்களில் வருகின்றனர். அதனால், அப்பகுதியில் எப்போதும் வாகன போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது.
சங்கனுார் ஓடையின் கிளை வாய்க்கால் குறுக்கே கான்கிரீட் பாலம் கட்டி, சாலை வசதி செய்யப்பட்டிருக்கிறது. ஒரே நேரத்தில் பல திசைகளில் இருந்தும் வாகனங்கள் குறுக்கும் நெடுக்குமாக வருவதால் அடிக்கடி சின்ன சின்ன விபத்துகள் ஏற்படுகின்றன. ரோட்டில் பெரிய அளவில் பள்ளம் உருவாகியிருக்கிறது. மழை பெய்யும் சமயத்தில் தண்ணீர் தேங்குவதால் குழி இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் குழிக்குள் இறங்கி தடுமாற்றம் அடைகின்றனர். பீக் ஹவர்சில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. விபத்து பகுதியாக போலீசாரால் அடையாளமிடப்பட்டுள்ளது.
அப்பகுதியில், 14 மீட்டர் அகலத்துக்கு சாலை வசதி இருக்கிறது. வாகன போக்குவரத்தை முறைப்படுத்த, 'ரவுண்டானா' மற்றும் சாலைத்தீவு திடல்கள் உருவாக்க வேண்டும். இக்கட்டமைப்பு ஏற்படுத்தினாலும், வாகனங்கள் செல்ல சாலையின் இருபுறமும் தலா 6 மீட்டர் அகலத்துக்கு இட வசதி கிடைக்கும்.
பாலத்துக்கு அருகே ரோட்டை ஆக்கிரமித்து டீக்கடை நடத்தப்படுகிறது. ஆங்காங்கே வேன்களும் நிறுத்தப்படுகின்றன. அவற்றை வேறிடத்தில் நிறுத்த ஏற்பாடு செய்து விட்டு, வாய்க்கால் கரை மற்றும் ரோட்டோர ஆக்கிரமிப்பை அகற்றி, ஜி.வி.ரெசிடென்சி சந்திப்பு அருகே 'ரவுண்டானா' அமைத்தால் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கலாம்; விபத்தும் ஏற்படாது.
இதுதொடர்பாக, மாவட்ட சாலை பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு குழு சார்பில் கள ஆய்வு செய்து எந்த இடத்தில் ரவுண்டானா, சாலைத்தீவு திடல் அமைக்கலாம் என்பது குறித்து வரைபடம் தயாரித்து சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது. சோதனை முறையில் கான்கிரீட் மையத்தடுப்பு கற்களை வைத்து அவ்விடத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். வாகன ஓட்டிகள் தடையின்றி சீராக செல்ல வழித்தடம் கிடைத்திருப்பதை உறுதி செய்ததும், மாநகராட்சி மூலம் நிரந்தரமாக சாலைத்தீவு திடல்கள் மற்றும் ரவுண்டானா அமைக்க வேண்டும்.

