/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கலெக்டர் உத்தரவிட்ட சம்பளம்: துாய்மை பணியாளருக்கு தரப்படுமா? சப்-கலெக்டரிடம் மனு கொடுத்து வலியுறுத்தல்
/
கலெக்டர் உத்தரவிட்ட சம்பளம்: துாய்மை பணியாளருக்கு தரப்படுமா? சப்-கலெக்டரிடம் மனு கொடுத்து வலியுறுத்தல்
கலெக்டர் உத்தரவிட்ட சம்பளம்: துாய்மை பணியாளருக்கு தரப்படுமா? சப்-கலெக்டரிடம் மனு கொடுத்து வலியுறுத்தல்
கலெக்டர் உத்தரவிட்ட சம்பளம்: துாய்மை பணியாளருக்கு தரப்படுமா? சப்-கலெக்டரிடம் மனு கொடுத்து வலியுறுத்தல்
ADDED : ஆக 18, 2025 09:15 PM

பொள்ளாச்சி; 'மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி நகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்,' என, சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டது.
பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது. சப் - கலெக்டர் ராமகிருஷ்ணசாமி தலைமை வகித்தார்.
ஆதியூர் கிராம மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஆதியூரில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வீதிகளில் படுத்துக்கொண்டு தெருவில் செல்லும் மாணவ, மாணவியர், பொதுமக்களையும் கடிக்க வருகின்றன. மேலும், இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்துகின்றன.
இதனால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிலை தடுமாறி விழுந்து விபத்து ஏற்படுகிறது.
அங்கன்வாடி வளாகம் மற்றும் ரேஷன் கடை வளாகத்தில் படுத்துக்கொண்டுள்ளன. இதனால், மிகுந்த இன்னல்கள் ஏற்படுகிறது. இதற்குரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீர்வு வேண்டும் வேட்டைக்காரன்புதுார் கருப்புசாமி கொடுத்த மனுவில், 'கண்பார்வை தெரியாத எனக்கு சொந்தமான, 6.2 ஏக்கர் நிலத்தை, கடந்த, 2007ம் ஆண்டு கடனுக்கு கையெழுத்து வாங்குவதாக கூறி, உறவினர் சிலர் ஏமாற்றி சொத்தை எழுதி வாங்கினர்.
இதை எதிர்த்து பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலம் தீர்ப்பாயத்தில் முறையீட்டேன்.
அதில், தோட்டத்தில் இருந்து என்னை அப்புறப்படுத்தக்கூடாது என அப்போதைய சப்-கலெக்டர் உத்தரவிட்டார். ஆனால், எனக்கு தொந்தரவு கொடுக்கின்றனர். இது குறித்து ஆனைமலை போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை,' என, குறிப்பிட்டுள்ளார்.
நடவடிக்கை தேவை கோவை மாவட்ட அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப்பணியாளர்கள் சங்க தலைவர் முருகானந்தம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
பொள்ளாச்சி நகராட்சியில் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், 130க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர்.
மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு நாளொன்றுக்கு, 655 ரூபாய் வழங்க வேண்டும். ஆனால், பொள்ளாச்சி நகராட்சியில் வேலை செய்யும் துாய்மை பணியாளர்களுக்கு, 420 ரூபாயே வழங்குகின்றனர்.
மேலும், ஒப்பந்ததாரர் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த பி.எப்., இ.எஸ்.ஐ. தொகையினை செலுத்தாமல் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்காணிக்கணும்! ஹிந்து முன்னணி கோவை தெற்கு மாவட்ட கோட்ட செயலாளர் பாலச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
வால்பாறை நகராட்சி மற்றும் வாட்டர்பால்ஸ், பழைய காடு, அயர்பாடி எஸ்டேட், தோனிமுடி முதல் டிவிசன், இரண்டாவது டிவிசன், மூன்றாவது டிவிசன், உருளிக்கல் எஸ்டேட் ஆகிய பகுதிகளில், கடந்த, ஏழு மாதங்களாக சிறு, சிறு குழுக்களாக இந்திய வம்சாவழியை சேராத பாகிஸ்தான், பங்களாதேஷ், சீனா நாட்டு புதிய நபர்களின் நடமாட்டம் ஆங்காங்கே கணப்படுகிறது.
அனுமதி பெறாமல் முகாமிட்டுள்ளவர்களின் குடியுரிமை சான்றிதழை சரிபார்க்க வேண்டும். இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, வலியுறுத்தப்பட்டுள்ளது.