/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வணிக பயன்பாட்டிற்காக தண்ணீர் விற்பனை.. நிலத்தடி நீரை உறிஞ்சாதீங்க!
/
வணிக பயன்பாட்டிற்காக தண்ணீர் விற்பனை.. நிலத்தடி நீரை உறிஞ்சாதீங்க!
வணிக பயன்பாட்டிற்காக தண்ணீர் விற்பனை.. நிலத்தடி நீரை உறிஞ்சாதீங்க!
வணிக பயன்பாட்டிற்காக தண்ணீர் விற்பனை.. நிலத்தடி நீரை உறிஞ்சாதீங்க!
ADDED : மே 01, 2024 11:10 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில், தனியார் நிலங்களில் உள்ள கிணறு மற்றும் 'போர்வெல்'களில் இருந்து, வணிக பயன்பாட்டிக்காக தண்ணீர் உறிஞ்சக் கூடாது, என, எச்சரிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி அருகே, ஆழியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், பாசனம் மற்றும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால், ஆழியாறு ஆறு மற்றும் பாசன கால்வாய்களில் இருந்து, முறைகேடாக தண்ணீர் எடுப்பதைக் கண்டறிந்து தடுக்க, நீர்வளத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இருப்பினும், ஆழியாறு ஆற்றை ஒட்டிய தனியார் நிலங்களில் உள்ள கிணறுகளில் இருந்து, வணிக பயன்பாட்டிற்காக தண்ணீர் எடுப்பதும், 'போர்வெல்' அமைத்து, தண்ணீரை உறிஞ்சுவதும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ஆழியாறு ஆற்றில் முறைகேடாக தண்ணீர் எடுப்பதை கண்டறிந்து தடுக்க, நீர்வளத்துறை, வருவாய், மின்வாரியம் மற்றும் போலீசார் அடங்கிய கூட்டு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள், ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதில, ஏழு இடங்களில், முறைகேடாக குழாய் பதித்து தண்ணீர் திருடுவது கண்டறியப்பட்டு, அவைகள் முழுமையாக அகற்றப்பட்டன. இதேபோல, தனியார் நிலங்களில், கிணறு மற்றும் போர்வெல்களில் இருந்து வணிகப் பயன்பாட்டிக்காக தண்ணீர் எடுத்து விற்பனை செய்வோரைக் கண்டறிந்து எச்சரித்து வருகின்றனர்.
கண்காணிப்புக் குழுவினர் கூறியதாவது:
பருவமழை மற்றும் கோடை மழை பொய்த்துப் போனதால், நீர் நிலைகள் அனைத்தும் வறண்டு, வற்றிப் போயுள்ளன. நிலத்தடி நீர் மட்டம், அதல பாதாளத்துக்கு சென்று விட்டது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான 'போர்வெல்'கள் மட்டுமின்றி, தனியார் நிறுவனங்கள், வீடுகளில் உள்ள போர்வெல்கள் மற்றும் கிணறுகளில் தண்ணீர் வற்றிப்போயுள்ளது.
இதனால், குடிநீர் மட்டுமின்றி, பிற தேவைகளுக்கான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில், சிலர், 'போர்வெல்'களை ஆழப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குறைவான ஆழத்தில் உள்ள போர்வெல்களில் தண்ணீர் இருப்பதில்லை.
இதனால், ஆற்றில் இருந்தும், ஆற்றுப்படுகையிலும் அத்துமீறி தண்ணீர் எடுத்து, கட்டுமானம் உள்ளிட்ட பல வணிக ரீதியான பயன்பாட்டிற்கு நீர் விற்கப்படுகிறது. இதுபோன்ற செயல்களால், சுற்றுப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில், நிலத்தடி நீர்மட்டம் சரிந்து, விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
ஆற்று நீரையும், நிலத்தடி நீரையும் உறிஞ்சி, விற்பனைக்கு எடுத்துச் செல்வதைக் கண்டறிந்து தடுக்க கண்காணிக்கப்படுகிறது. தனியார் நிலங்களில் வணிக ரீதியாக தண்ணீர் உறிஞ்சி விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

