/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவைக்கு வெளிச்சம் தந்த சாமிக்கண்ணு வின்சென்ட்
/
கோவைக்கு வெளிச்சம் தந்த சாமிக்கண்ணு வின்சென்ட்
ADDED : நவ 15, 2025 10:24 PM
கோவை நகருக்கு 1932-ம் ஆண்டு வரை மின்சாரம் வரவில்லை. வீடுகளில் சிம்னி விளக்குகள், அரிக்கேன் விளக்குகள், கொஞ்சம் வசதியான வீடுகளில் விசேஷங்களுக்கும் பெட்ரோமாஸ் விளக்குகளே பயன்படுத்தப்பட்டன.
தெருக்களிலோ வெளிச்சம் இருக்காது, கம்பங்களில் மண்ணெண்ணெய் விளக்குகள் தொங்கவிடப்பட்டிருக்கும். தினமும் மாலை 6:00 மணியளவில், நகரசபை பணியாளர்கள் வந்து எண்ணெய் ஊற்றி, விளக்குப் பொருத்திவிட்டு போவார்கள். அதில் சில எரியும்; பல விளக்குகள் காற்று பலமாய் அடித்தால் கண்மூடிக்கொள்ளும்.
அரசாங்கம் மின்சாரம் வழங்கியது 1932ல் தான். ஆனால், 1930-ல் கோவை நகரின் மையப் பகுதிகளில் சில தெருக்கம்பங்களில் மின் விளக்குகள் எரிந்தன.
கோயம்புத்துார் ஜில்லாவிலேயே மின் திட்டம் செயல்படாத அந்த ஆண்டில், இங்கு மட்டும் எப்படி சில மின்விளக்குகள் எரிந்தன?
கோவையின் சிற்பிகளில் ஒருவரான சாமிக்கண்ணு வின்சென்ட்தான் காரணம். தனது சொந்தத் தொழில் உபயோகத்திற்காக, பெரிய ஆயில் எஞ்சினை வைத்துப் பயன்படுத்தினார்.
மீதமிருந்த மின்சக்தியை, தெருவிளக்குகளுக்குத் தரட்டுமா என்று நகரசபைக்கு எழுதிக் கேட்டார் அவர். நகரசபையும் அனுமதித்தது.
வெரைட்டி ஹால் தியேட்டருக்குப் போக, மீதமுள்ள பவரை அவர் தியேட்டரை சுற்றியுள்ள தெருவிளக்குகளுக்குத் தந்தார். அந்த நேரத்தில்தான், நீலகிரியில் ஏறக்குறைய, நீர்வீழ்ச்சி போலவே விரைந்தோடும், 'பாய்க் கரை' என்னும் ஆற்றில் பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த மின்சாரம் எடுக்கும் திட்டம் நிறைவு பெற்றது.
அந்த 'பாய்க்கரை' ஆற்றை தான், வெள்ளையர்கள் தங்கள் வாயில் நுழையாத பெயர் என்று 'பைகாரா'வாக மாற்றி விட்டனர். பைகாரா மின்திட்டத்தால் கிடைக்கும் மின்சாரத்தை பெற்று, நகருக்கு விநியோகிக்கவே, அன்று டாடாபாத் அருகில் உள்ள 'பவர் ஹவுஸ்' கட்டப்பட்டது.
உடனடியாக ஐந்தாண்டுத் திட்டம் போல், தீட்டி கோவை நகரசபை நிர்வாகம் 1932ல் இருந்து 1937 மார்ச் 31ம் தேதிக்குள் ரூ.5.50 லட்சம் மதிப்பில் 2,366 மின்விளக்குகளை தெருக்களில் எரிய விட்டது.
நம்நாடு சுதந்திரம் பெற்ற நள்ளிரவில், கோவை நகரில் மட்டும், 4,667 தெருவிளக்குகள் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தன.

