/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மறுபடியும் நொய்யல் ஆற்றில் மணல் திருட்டு! என்னவானது 'குண்டாஸ்' அறிவிப்பு?
/
மறுபடியும் நொய்யல் ஆற்றில் மணல் திருட்டு! என்னவானது 'குண்டாஸ்' அறிவிப்பு?
மறுபடியும் நொய்யல் ஆற்றில் மணல் திருட்டு! என்னவானது 'குண்டாஸ்' அறிவிப்பு?
மறுபடியும் நொய்யல் ஆற்றில் மணல் திருட்டு! என்னவானது 'குண்டாஸ்' அறிவிப்பு?
ADDED : மே 15, 2025 12:02 AM

தொண்டாமுத்தூர், ; தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள நொய்யல் ஆற்றில், மீண்டும் மணல் திருட்டு அதிகரித்துள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டிய வருவாய்த்துறையினர், என்னதான் செய்கின்றனர் என தெரியவில்லை.
கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து, நூற்றுக்கணக்கான ஓடைகள் இணைந்து, தொம்பிலிபாளையத்தில் உள்ள கூடுதுறை என்னும் இடத்தில், நொய்யல் ஆறு உருவாகி, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக கரூரில் காவிரியில் கலக்கிறது.
நொய்யல் ஆற்றின் மூலமே, கோவையில் உள்ள பெரும்பாலான விவசாய நிலங்களும் பாசனம் பெறுகின்றன. குட்டைகளுக்கும் நீராதாரமாக உள்ள நொய்யல் ஆறு, கோவையின் ஜீவ நதியாக உள்ளது.
நொய்யல் ஆற்றில் நீர் குறையும்போதும், நீரின்றி வறண்டு போகும் போதும், சில கும்பல்கள், இரவு நேரங்களில், கழுதை மற்றும் டிராக்டர் பயன்படுத்தி, மணல் திருடி, விற்பனை செய்து வந்தனர். இது குறித்து நமது நாளிதழில் தொடர்ந்து, செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து, இந்த மணல் கொள்ளையை தடுக்க, மாவட்ட நிர்வாகம், சமூக ஆர்வலர்கள் பல தரப்பினரும் முயன்றனர். இருப்பினும், மணல் கொள்ளை தொடர்ந்தது. இந்நிலையில், பேரூர் தாலுகா பகுதியில், மண் கொள்ளை விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால், இங்கு சில மாதங்களாக மணல் திருட்டு நடக்காமல் இருந்தது.
இந்நிலையில், ஆலாந்துறை, தொம்பிலிபாளையம், கூடுதுறை நொய்யல் ஆற்றில், தற்போது, மீண்டும் மணல் திருட்டு நடக்கிறது. கூடுதுறைக்கு கிழக்கு திசையில் உள்ள நொய்யல் ஆற்றில், பெருமளவு மணல் திருடியுள்ளனர்.
கழுதைகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் மூட்டை கட்டி, மணல் திருடி வருகின்றனர். இந்த இடம் சாலையில் இருந்து, 500 மீட்டர் தொலைவில் உள்ளதால், வெளியில் தெரிவதில்லை.
படங்களுடன் நமது நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டதால், நொய்யல் ஆற்று மணலை திருடுபவர்கள், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், இதுவரை, மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் ஒருவர் மீதும், குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இனியாவது, அதிகாரிகள், மணல் திருட்டை தடுத்து, கடும் நடவடிக்கை எடுப்பார்களா?